மார்க்கெட் கமிட்டிக்கு பூட்டு போட்டு போராட்டம்: பணம் தராததால் விவசாயிகள் ஆத்திரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் கமிட்டிக்கு பூட்டு போட்டு போராட்டம்: பணம் தராததால் விவசாயிகள் ஆத்திரம்

Added : ஜூன் 24, 2020
Share

சங்கராபுரம் : சங்கராபுரம் மார்க்கெட் கமிட்டியில் விளை பொருட்களுக்கு பணம் தராமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து நேற்று கமிட்டிக்கு பூட்டு போட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டியில் சங்கராபுரம் சுற்றுப் பகுதிகளில் உள்ள 50 கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அவ்வாறு விற்பனைக்கு கொண்டு வரும் பொருட்களை கொள்முதல் செய்யும் நிர்வாகம் கடந்த ஒன்றரை மாதமாக பணம் தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். விவசாயிகள் தினசரி கமிட்டிக்கு வந்து பணம் கேட்டும் தராததால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கமிட்டி முகப்பு வாயில் கேட்டுக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளே செல்ல முடியாமல் வெளியே நின்றனர்.தகவலறிந்து வந்த சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் திருமால் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கமிட்டி மேற்பார்வையாளர் பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடந்தது.அதில், விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்த வெளியூர் வியாபாரிகள் பணம் தராமல் உள்ளதாக கமிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட வியாபாரிகளிடம் சப் இன்ஸ்பெக்டர் மொபைல் போனில் பேசி, இன்று (நேற்று) மாலைக்குள் பணத்துடன் வருவதாக வியாபாரிகள் தெரிவித்ததாக கூறினார். அதனைத் தொடர்ந்து காலை 11:00 மணிக்கு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.விவசாயிகளின் விளை பொருட்களுக்கு பணம் தராமல் காலம் தாழ்த்துவது அடிக்கடி நடைபெறுவதால் கலெக்டர் தலையிட்டு விளை பொருட்களுக்கான உரிய பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X