அரசு பள்ளியை தரம் உயர்த்தக்கோரி பெற்றோர் உண்ணாவிரத போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியை தரம் உயர்த்தக்கோரி பெற்றோர் உண்ணாவிரத போராட்டம்

Added : ஜூன் 24, 2020
Share

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியை, தரம் உயர்த்தக்கோரி பொதுமக்கள் மற்றும் பெற்றோர், நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளியில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, 412 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. மேல்நிலை படிப்புக்கு, வெகு தொலைவில் உள்ள அரசு பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, உடனடியாக, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்றும், பள்ளி ஆசிரியையிடம் ஒழுங்கீனமாக நடந்த, ஆசிரியர் வினோத்குமார் மீது, கடந்த மார்ச், 23ல் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும், இதுவரை நடவடிக்கையில்லை என்பதை கண்டித்தும், அந்தேவனப்பள்ளி பஞ்., தலைவர் அரவிந்தன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், பள்ளி முன், நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டை இன்ஸ்., சரவணன் மற்றும் தலைமை ஆசிரியை சுகந்தி ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆசிரியர் வினோத்குமார் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளதாக, பெற்றோர் தெரிவித்தனர். அதற்கு, ஆசிரியர்கள் பிரச்னையில் உயரதிகாரிகள் முடிவு எடுப்பார்கள் என்றும், பள்ளியை தரம் உயர்த்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், சமாதானமடைந்த மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X