சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

நம் தேசத்திற்கு பிடித்த கிரஹணம்!

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நம் தேசத்திற்கு பிடித்த கிரஹணம்!

வி.பி.முருகானந்தன், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: துாத்துக்குடியில் இயங்கி வந்த, ஸ்டெர்லைட் ஆலையை மூட, சில அமைப்புகள் தீவிரமாக போராடின. அதன் எதிரொலியாக, அந்த ஆலையை மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. இது, சீனாவின் சதியாக, ஏன் இருக்கக் கூடாது?காப்பர் ஏற்றுமதி செய்தது போய், இன்றைக்கு இறக்குமதிக்கு, வெளிநாடுகளையே, நாம் நம்பி இருக்கிறோமே... சீனாவின் நரித்தனம், இங்குள்ள, 'போர்வையாளர்' வழியாக, நம் நாட்டில் வேலை செய்துள்ளது.ஒரு தொழிற்சாலை அமையும்போது, யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அந்த தொழிற்சாலை நன்கு வளர்ந்து, அதனால், ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வரும் நிலையில், அதை மூடச் சொல்லி போராட்டம் நடத்துவது, நம் நாட்டின் அரசியல் விளையாட்டு!
பூமியைக் கெடுத்து விடக் கூடாது என்பதில், எந்த விதமான மாற்றமும் இல்லை. மண் கெடக் கூடாது தான்; அதே நேரத்தில், தொழில்களும் பாதிக்கக் கூடாது. இரண்டு பக்கமும் சமன்படுத்திப் போவது தானே, சரியான செயல்பாடு.ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், வேதாந்த குழும நிர்வாகத்தினர் நடுத்தெருவிற்கு வந்துவிடவில்லை. அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்து, இன்னும் சில தலைமுறைக்கு போதுமானது. இத்தொழில் இல்லையென்றால், வேறு தொழிலுக்கு மாறிவிடுவர்.ஆனால், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்ந்திருந்த, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்ன? அத்தனை பேருக்கும், வாழ்வாதாரம் அமைத்துக் கொடுப்பது யார்?இந்த காப்பரை, ஏதோ ஒரு நாடு, உற்பத்தி செய்து தானே, ஏற்றுமதி செய்கிறது. போதிய பாதுகாப்புடன், எந்த தொழிலும் செயல்படலாம்.எந்த ஒரு நவீன தொழிலும், பாதகம் இல்லாமல் இல்லை. குறைந்த அளவிலேனும், அதனால் பாதிப்பு இருக்கத் தான் செய்யும்.திருப்பூர், 'டையிங்' பிரச்னை உலகம் அறிந்தது. 'முடியவே முடியாது... திருப்பூர் தொழிலே அவ்வளவு தான்' என்றார்கள். ஆனால், சாத்தியமாயிற்று தானே... இன்றைக்கு, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' முறையால், 90 சதவீதம் மாசு கட்டுப்படுத்தப்படவில்லையா; மீண்டு வரவில்லையா திருப்பூர்? புதுப்புது அறிவியல் முறைகளால், புத்திசாலித்தனமான நடைமுறைகளால், பாதிப்பின் அளவைக் கட்டுப்படுத்தாமல், ஒரேயடியாக கழித்து விட முயற்சிப்பது, வேகமாக வளர்ந்து வரும் தேசத்திற்கு நல்லதல்ல.அரசியல் விளையாட்டுக்கு, ஒரு தொழிலையே பலிகடாவாக்குவது, நம் தேசத்திற்கு பிடித்த கிரஹணம்!

'குடிக்க' வழியிருக்கு;படிக்க?

அ.யாழினி பர்வதம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: மூன்று மாதங்களாக, வீட்டிற்குள்ளேயே முடங்கிகிடப்பது, நமக்கு புதிய அனுபவம். நம் முன்னோர், இப்படி இருந்தனரா என்றும், தெரியவில்லை; வரும் சந்ததியும், இப்படி இருக்குமா என்றும் தெரியாது.நமக்கு கிடைத்த, இந்த தனிமையை, எத்தனை பேர், பயனுள்ளதாக மாற்றிக்கொண்டனரோ!வேம்பு பூவிலும், சிறு தேன் துளி உள்ளது போல, எந்த துயரத்திலும், சிறு நன்மை ஒன்று நிச்சயம் இருக்கும்.இன்றைய தலைமுறை, புத்தக வாசிப்பில் இருந்து விலகிவிட்டது. சமூகவலை தளத்தில், ஓரிரு வரிகளை மட்டும் படிப்பதும், 'மீம்ஸ்' பார்த்து ரசிப்பதோடு, அவர்களின் வாசிப்பு கவனம் முடிந்துவிடுகிறது.'பொன்னியின் செல்வன்' போன்ற நாவல்களோ, 'அர்த்தமுள்ள ஹிந்து மதம்' போன்ற ஆன்மிக கட்டுரைகளையோ, கவிதைகளையோ, இன்றைய தலைமுறை படிக்கிறதா என, தெரியவில்லை. அனைவரின் கைகளிலும் மொபைல்போன் இருக்கிறது; ஆனால், புத்தகம் இல்லை.மொபைல்போன் வழியே, புத்தகம் வாசிக்கிறார்களா என்றால், அதுவும் இல்லை. இந்த, 'கொரோனா' ஊரடங்கு காலம், புத்தக வாசிப்புக்கு உகந்ததாகும். அதை, தங்கள் பிள்ளைகளுக்கு, பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்.ஆனால், நுாலகங்களும் மூடப்பட்டதால், படிக்க புத்தகமில்லாமல் போனது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு, 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டன; ஆனால், நுாலகங்களை திறக்கவில்லை. படிக்க வேண்டாம்; மது குடிக்கலாம் என்கிறதோ, மக்கள் நலனில், 'அக்கறை'யுள்ள அரசு!நுாலகங்களை திறந்து, புதிய உறுப்பினர்களை சேர்த்து, புத்தகத்தை, வீட்டிற்கு எடுத்துச் சென்று, படிக்க அனுமதிக்கலாமே!ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால், நுாலகங்களை திறப்பது, ஆரோக்கியமான சமூக வளர்ச்சிக்கு வழி வகுக்கும். முதல்வர் முடிவெடுப்பாரா?

தனியார் பள்ளிஆசிரியர்களையும்கவனியுங்கள்!

செ.அருள் பிரகாசம், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாளிதழில் வெளியான, 'தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனை கவனிப்பது அவசியம்' என்ற செய்தி, வரவேற்கத்தக்கது.ஊரடங்கால் மூடப்பட்ட தனியார் பள்ளிகள், கல்வி கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களின் நலனை காக்கும் வகையில், பள்ளிகளின் தன்மைக்கேற்ப, கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை வசூலிக்கும் திட்டத்தை, அமல்படுத்த வேண்டியது அவசியமாகும்.அரசுப் பள்ளி ஆசிரியர்களை விட, அதிகம் உழைத்தாலும், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து கொடுத்தாலும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவு தான்.அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள், தனியார் பள்ளியில் படிக்கின்றனர். அந்த அளவிற்கு, தனியார் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன; அதற்கு காரணம், தனியார் பள்ளி ஆசிரியர்களே.அவர்களின் வாழ்வாதாரம், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கிடைத்த சொற்ப ஊதியமும், இப்போது கிடைக்கவில்லை.எனவே, தனியார் பள்ளிகள், கடந்த, 2019 - -20ம் கல்வியாண்டுக்கான, நிலுவையில் உள்ள கட்டணங்களை பெற்றுக்கொள்ள, அரசு அனுமதிக்க வேண்டும்.தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு நேரடியாக, அவர்களது வங்கி கணக்கில், குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும். ஆசிரியர் பணி, அறப்பணி அல்லவா!ஊரக பகுதியில், தனியார் பள்ளி நடத்துவது, எளிதான பணி அல்ல. எனவே, மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து, ஒரு குறிப்பிட்ட சதவீத கட்டணத்தை பெற்று கொள்ள, அரசு ஆவன செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
25-ஜூன்-202002:49:16 IST Report Abuse
Subbanarasu Divakaran தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் நன்றாக பணியாற்றுகிறார்கள். அனால் சம்பளம் குறைவு ஏனென்றால் இந்த பள்ளிகள் லாபத்துக்காக நிறுவப்பட்டிருக்கின்றன போடு சேவையை ஐயா இல்லவேய் இல்லாய்.ஏன் அரசு இந்த பள்ளிகளின் ஆசிரியர்க்கு சம்பளம் கொடுத்து மேலும் பள்ளி நடத்துவர்கு வெறியுடன் பில் அனுப்ப வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X