மும்பை; மத்திய, 'ஆயுஷ்' அமைச்சகத்தின் தடையை மீறி, ஏப்., மாதத்தில், கொரோனாவை தடுக்கும் மருந்துகள் என, 50 விளம்பரங்கள் வெளியானதாக, நாட்டின் விளம்பர தர நிர்ணய கவுன்சில் கூறியுள்ளது.
க்ஷ
கொரோனா வைரஸ் அதிகம் பரவ துவங்கிய நிலையில், அதை தடுப்பது மற்றும் குணப்படுத்தும் மருந்துகள் தொடர்பாக, பல்வேறு ஆயுர்வேத, ஹோமியோபதி நிறுவனங்களின் விளம்பரங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.இதன்படி, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனமும், கொரோனா தடுப்பு மருந்து குறித்து விளம்பரத்தை வெளியிட்டது. இது போன்ற உறுதிப்படுத்தப்படாத மருந்துகள் தொடர்பான விளம்பரங்களை, ஊடகங்களில் வெளியிட, 'ஆயுஷ்' அமைச்சகம், ஏப்., 1ம் தேதி தடை விதித்தது.அந்த உத்தரவை மீறி, ஏப்., மாதம் மட்டும், 50 விளம்பரங்கள் வெளியானதாக, இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் கூறியுள்ளது.
இதுகுறித்து, அதன் அறிக்கை:கொரோனாவை தடுக்கும் ஊடக விளம்பரங்கள் தொடர்பாக, ஆயுஷ் அமைச்சகம் கேட்டுக்கொண்டதன்படி, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம், ஏப்., மாதத்தில் மட்டும், ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும், 50 நிறுவனங்கள், கொரோனாவை குணமாக்குவதாக விளம்பரங்களை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அந்த நிறுவனங்கள் மற்றும் மருந்துகள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.