புவனகிரி : புவனகிரி அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் பாசன வாய்க்கால் வெட்டும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார்.
புவனகிரி அருகே தம்பிக்கு நல்லாண்பட்டினம் பகுதியில் அரியகோஷ்டி பாசன வாய்க்காலின் கிளை வாய்க்காலான தெற்கு வெளி வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரால், அப்பகுதியில் 500 ஏக்கருக்கும் மேல் விவசாய சாகுபடி செய்கின்றனர்.தெற்கு வெளி வாய்க்கால் துார்ந்து புதர் மண்டியதால், விவசாயத்திற்கு தண்ணீர் தேக்க முடியாமலும், மழை காலங்களில் ஊருக்குள் தேங்கும் தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை.இந்நிலையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் வெட்டி ஆழப்படுத்த அதிகாரிகள் ஒப்புதல் பெற்றனர். இந்த வாய்க்கால் வெட்டும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள்,பெண்கள் ஈடுபட்டனர்.
பங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்பாபு, ஓவர்சியர் ஜெயராமன் ஆய்வு செய்தனர்.பணிகள் குறித்து பணித்தள பொறுப்பாளர் சுபா விளக்கமளித்தார். ஊராட்சித் தலைவர் ஜோதி நாகலிங்கம் உடனிருந்தார்.