விருதுநகர்:விருதுநகரில் அதிகரித்து வரும் தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு சவால்களை சந்திக்கும் நிலையில் உள்ளது.
மாவட்டத்தில் 250 ஐ தாண்டி வேகமெடுத்து பரவி வருகிறது கொடூர கொரோனா. அதை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. மாவட்டத்தில் 11 அரசு மருத்துவமனைகளில் 710 படுக்கைகள், பள்ளி, கல்லுாரி விடுதிகளில் 4,300 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளன. கடந்த 10 நாட்களில் மட்டும் 120க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதில் சென்னையில் இருந்து வந்தவர்களே அதிகம்.
ஜூன் துவக்கத்தில் சென்னையில் இருந்து வந்தவர்களை முறையாக தனிமைப்படுத்தி கட்டுப் படுத்தி இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை. தற்போது மதுரையில் பரவல் அதிகரித்து வருகிறது. ஊரடங்கிலும் அரசு ஊழியர்கள் உட்பட பலர் மதுரை, திருமங்கலத்தில் இருந்து விருதுநகருக்கு வருகின்றனர். முறையான பரிசோதனைகள் மேற்கொண்டால் மட்டுமே மாவட்டத்தில் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
காத்திருக்கும் சவால்கள்
* ஐ.சி.யூ., படுக்கை வசதி 40க்கும் குறைவாகவே உள்ளது. பாதிப்பை ஒப்பிடும் போது படுக்கை வசதி குறைவே. கொரோனா வார்டில் இருக்கும் நோயாளிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் ஐ.சி.யூ., பிரிவு இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். ஐ.சி.யூ., பிரிவின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே சாத்தியம்.
* இதுவரை 16,507 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
* கொரோனா சிகிச்சை வார்டுகளில் சிகிச்சை பெறுவோர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு மன அழுத்தம் குறைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மாவட்டங்களில் கொரோனா சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டத்திற்கே வந்து செயல்பட துவங்கி விட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சமூகநல செயலாளர் மதுமதி வரவில்லை. மாவட்டத்தில் இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இணைந்து செயல்படும் போது நோயின் வீரியத்தை எளிதில் கட்டுப்படுத்த முடியும். இந்த சவால்களை சமாளித்தால் மட்டுமே கொரோனா தாக்கத்தை கட்டுபாட்டில் வைக்க முடியும்.
ஐ.சி.யூ., பிரிவு அதிகரிக்கப்படும்
விருதுநகர் அரசு மருத்துவமனையின் பொதுவார்டுகளில் ஆக்ஸிஜன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஐ.சி.யூ., பிரிவு எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். மன
அழுத்தம் போக்க கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.
கலெக்டர் கண்ணன், விருதுநகர்