மகளை கொன்ற தாய் உட்பட மூவர் கைது 6 ஆண்டுக்கு பின் சடலம் தோண்டி எடுப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளை கொன்ற தாய் உட்பட மூவர் கைது 6 ஆண்டுக்கு பின் சடலம் தோண்டி எடுப்பு

Added : ஜூன் 24, 2020
Share
 மகளை கொன்ற தாய் உட்பட மூவர் கைது 6 ஆண்டுக்கு பின் சடலம் தோண்டி எடுப்பு

திருப்பூர்; திருப்பூரில், ஆறு ஆண்டுகளுக்கு முன் மகளை கொலை செய்து, வீட்டு முன் புதைத்த, கல் நெஞ்சக்கார தாய் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.

பரிசோதனைக்காக, சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. திருப்பூர், வீரபாண்டியைச் சேர்ந்தவர், எஸ்தர் பேபி, 28. இவர், 2014ல், கணவரை பிரிந்து, நான்கு பெண் குழந்தைகளோடு, வேலன் நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.அதே ஆண்டு, ஜூன் 18ல், எஸ்தர் பேபி மாயமானதாக, அவரது தந்தை அப்துல் காதர், போலீசில் புகார் அளித்தார்.

வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறு ஆண்டுகளாக விசாரித்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. எஸ்தர் பேபி கொலை செய்யப்பட்டு, வீட்டு முன் புதைக்கப்பட்டது, சமீபத்தில் தெரிய வந்தது.இது தொடர்பாக, அவரது தாய் சகாய ராணி, 50, தாய் மாமா சேவியர் அருண், 40, மற்றும் சகாய ராணியின், கள்ளக்காதலன் பாக்யராஜ் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.எஸ்தர் பேபி சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. அதில், கிடைத்த எலும்புகளை, மருத்துவ குழுவினர், டி.என்.ஏ., பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.போலீசார் கூறியதாவது:சகாய ராணியும், அப்துல் காதரும் கலப்பு மணம் செய்தவர்கள். குடும்ப தகராறில், மனைவியை பிரிந்து அப்துல் காதர் தனியே வசித்தார்.மூன்று மாதங்களுக்கு முன் தான், அப்துல் காதர் இறந்தார்.திருப்பூர் அருகே மங்கலத்தில் தங்கியிருந்தபோது, சகாய ராணிக்கு, பாக்யராஜ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விஷயம், எஸ்தர் பேபிக்கு தெரிந்ததால், தாயை கண்டித்தார்.தங்களின் தொடர்புக்கு, இடையூறாக மகள் இருப்பதாக உணர்ந்த தாய், தன் தம்பி சேவியர் அருணை, திருப்பூருக்கு வரவழைத்தார்.மூவரும் சேர்ந்து, 2014 ஜூன், 14ல், எஸ்தர் பேபியை கத்தியால் குத்தி கொலை செய்து, வீட்டு முன் குழி தோண்டி புதைத்து, சிமென்ட் பூசி மறைத்தனர்.எஸ்தர் பேபியின் குழந்தைகளை, சகாய ராணியே வளர்த்து வந்தார். 2016ல் வீட்டையும் விற்று விட்டு, மங்கலம் அருகே, வாடகை வீட்டுக்கு குடியேறி விட்டார். கொலை குறித்து, கடந்த மார்ச் மாதம் துப்பு துலங்கியது. 'லாக் டவுன்' என்பதால், சடலத்தை தோண்ட, இன்று தான் அனுமதி கிடைத்தது.இவ்வாறு, அவர்கள் கூறினர். கொலை கும்பல் சிக்கியது எப்படி?கடந்த மார்ச்சில், வேறொரு கொலை வழக்கு தொடர்பாக, துாத்துக்குடியை சேர்ந்த சேவியர் அருணை, சென்னை, பள்ளிக்கரணை போலீசார் பிடித்தனர். அப்போது, சகாயராணியுடன் சேர்ந்து, எஸ்தர் பேபியை கொலை செய்து புதைத்த விவகாரம் தெரிந்தது. ஆறு ஆண்டுகளுக்கு பின், வெளிச்சத்துக்கு வந்த கொலை, திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X