கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் தாக்குதலில் தந்தை, மகன் மரணம் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

மதுரை; போலீஸ் தாக்குதலில் காயமடைந்த தந்தை, மகன், கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணம் அடைந்தது குறித்து, தானாக முன்வந்து விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, துாத்துக்குடி, எஸ்.பி., அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், 63, என்பவர் மரக்கடை நடத்தினார். இவரது மகன் பென்னிக்ஸ், 31, அதே பகுதியில் அலைபேசி கடை நடத்தினார்.ஜூன், 19 இரவு, 9:00 மணிக்கு, சில போலீசார் ரோந்து சென்றனர்.ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருப்பதாகக் கூறி, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரிடம், கடைகளை மூடுமாறு கூறினர்.

இதில், இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. தந்தை, மகனை கைது செய்து, சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.ஜூன், 22ல் பென்னிக்ஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டது; கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். காயங்களுடன் இருந்த ஜெயராஜும், 23ல் இறந்தார்.ஐகோர்ட்டில் மனுஜெயராஜ் மனைவி செல்வராணி மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற கிளை நீதிபதி பி.புகழேந்தி, 'இருவரது உடல்களையும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், மூன்று டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.'வீடியோ பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்ற கிளையின் நீதித்துறை பதிவாளர், 'இருவர் மரணம் குறித்து, தானாக முன்வந்து, பொதுநல வழக்காக விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்தார்.இதன் அடிப்படையில், நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு, நேற்று தானாக முன்வந்து காணொலியில் விசாரித்தது. டி.ஜி.பி., மற்றும் துாத்துக்குடி எஸ்.பி., காணொலியில் ஆஜராக உத்தரவிட்டு, சிறிது நேரம் ஒத்தி வைத்தது.அரசு தரப்பில், 'கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில், உயரதிகாரிகள் கூட்டத்தில், டி.ஜி.பி., பங்கேற்றுள்ளார்.ஆதலால், ஆஜராக முடியவில்லை. பதிலாக, தென் மண்டல, ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகிறார்' என, தெரிவிக்கப்பட்டது.ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன்: கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரிக்கிறார்.

சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.எஸ்.பி., அருண் பாலகோபாலன்: தற்போது இங்கு அமைதி நிலவுகிறது. இருவரின் உடல்களைப் பெற, உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கின்றனர்.நீதிபதிகள்: இச்சம்பவம் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.பி.: சம்பவம் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.நீதிபதிகள்: சம்பவம் குறித்து, நீதித்துறை விசாரணை நடக்கிறது.

அதை, இந்நீதிமன்றம் கண்காணிக்கிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை; அமைதி காக்க வேண்டும்.கொரோனா ஊரடங்கு காலத்தில், இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க, போலீசார் பின்பற்றும் வகையில் வழிகாட்டுதல்கள் உள்ளனவா?அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அதை மேலும் மேம்படுத்துவது குறித்து, அரசு தரப்பில் தெளிவுபடுத்த வேண்டும்.மாஜிஸ்திரேட் விசாரணைக்கு, துாத்துக்குடி மாவட்ட நிர்வாகம், அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.சம்பவம் மற்றும் தற்போதைய நிலை குறித்து, துாத்துக்குடி, எஸ்.பி., ஜூன், 26ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.மாஜிஸ்திரேட் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X