சீனா தந்த இரு பிரச்னைகள்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 சீனா தந்த இரு பிரச்னைகள்

இந்திய- சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஒரு நள்ளிரவில் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தது வேதனை தந்தது.

அரை நுாற்றாண்டு காலத்துக்கும் மேலாக நடைபெறுகிற, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்தப் பிரச்னையைத் தவிர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், வலிய வந்து வம்புக்கு இழுக்கிறது சீனா.


650 முறை ஊடுருவல்பிரிகேடியர் நிலை, மேஜர் ஜெனரல் நிலை, போர் கமாண்டர் நிலை என பல மட்டங்களில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த உயிர்ச்சேதம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்று நேற்றல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற போதெல்லாம், சீனா தனது ஊடுருவல் போக்கை காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 650 முறை ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அத்துமீறலுக்கு அருகில் உள்ள சீனாவின் எல்லைப்புறத்தில் தங்கள் சாலைவசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை நகர்ப்புறத்தில் எப்படி செய்வார்களோ, அவ்வாறாக செய்து கொண்டுள்ளனர். மிக எளிதாக அந்தப் பாதையை அடைந்து விடுவதற்கும், வேகமாக எல்லையை தொட்டு விடுவதற்கும், அதிவேக மாக எல்லை ஊடுருவலுக்கும் இந்த சாலைவசதிகள் சீனாவுக்கு துணை புரிகின்றன.


வர்த்தகம்சீனாவின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. அதற்குரிய விற்பனை வணிகத்தை அன்னிய செலவாணி ஈட்டித் தருகிற முக்கிய வியாபாரக் கேந்திரமாக இந்தியா உள்ளது.இருந்தபோதிலும் கூட இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஊடுருவுவது அவர்களின் முன்னுக்குப் பின் முரணான செயல்பாட்டையே காட்டுகிறது.2018ல் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் 95.54 பில்லியன் டாலர். இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பு 18.84 பில்லியன் டாலர்கள்.
இ -கமார்ஸ், அலைபேசித்துறை என இந்தியா சைனாவுக்கு ஒரு பெரிய முதலீட்டு மையமாக இருப்பது ஊரறிந்த விஷயம். சீன நிறுவனமான அலிபாபா, இந்தியாவின் பிக்பாஸ்கெட், பேடிஎம், ஸ்னாப்டில் மற்றும் ஜொமேட்டோ போன்ற நிறுவனங்களில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. அதுபோல பைஜு, பிளிப்காட், ஓலா, ஸ்விக்கி ஆகிய இந்திய நிறுவனங்களில் சீனாவின் சென்சென்ட் நிறுவனத்திற்குப் பங்கு உள்ளது. விவோ, ஓப்போ, ஜியோமி போன்ற அலைபேசி நிறுவனங்களுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருந்து வருகிறது.


மேம்படாத உறவுஇந்தியாவும், சீனாவும் ஒருவருக்கொருவர் பெரும் விரோதப் போக்கை ஏற்படுத்த முடியாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. இந்த எல்லை மீறலின் உரசலின் காரணமாக கல்வான் பள்ளத்தாக்கின் மீதான தங்கள் நியாயத்தை, பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா எடுத்து வைக்கின்ற நிலையிலும், உறவுகள் மேம்படவில்லை என்றால், வர்த்தகங்கள் மற்றும் முதலீடுகள் பெரிய அளவில் பாதிக்கப்படும். கோவிட் -19 தொற்று ஏற்பட்டு உலகம் முழுவதும் பல்வேறுபட்ட இடர்பாடுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிற இந்த வேளையில், வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகில் சீனா தனது வர்த்தகத்தை தனியாகப் பேணிக்காக்க, இந்தியா உடனான உறவை காப்பது அவசியம்.


மருந்து வேண்டும்கொரோனா நோயை குணமாக்கும் மருந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை ஏற்றுமதி செய்ய தடை செய்த இந்தியா பின்னர் இதற்கு அனுமதி வழங்கி விட்டது. இதன் மூலம் இந்த உலகுக்கு ஒரு உண்மையை உரைத்திருக்கிறது இந்தியா. அது அண்டை நாடுகளுடனான உறவை பேணிக்காக்க வேண்டும் என்பது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமானால், ஆக்டிவ் மருந்துப் பொருட்கள் என அழைக்கப்படும் இந்த மருந்தின் மூலப்பொருள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். இந்தியாவில் இருந்து அதிக ஏற்றுமதி செய்யப்படும் மற்றொரு மருந்து குரோசின். சீனாவில் இருந்து குரோசினுக்கான பாரசிட்டமால் வருகிறது.
பார்லிமென்டில் இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் மருந்து நிறுவனங்கள் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மூலப்பொருட்களை(ஏபிஐ) சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்றன. இப்படித்தான் சீனாவுக்கும், இந்தியாவுக்குமான உறவுகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன.


துருப்புச்சீட்டுபருத்தி, தாமிரம், வைரம், இயற்கை ஆபரணக்கற்களையும் சீனாவுக்கு விற்பனை செய்கிறது இந்தியா. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தை என்பதுதான் ஒரே துருப்புச் சீட்டாக இருக்கிறது.இருந்தபோதிலும், இரு நாடுகளுமே கல்வான் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்துவதை, உணர்வுப்பூர்வமான ஒன்றாகக் கருதுகிறது. கல்வான் பள்ளத்தாக்கு என்பது இந்தியாவின் ஒரு பகுதி. அதன் வழியாகத்தான் சீனா, இந்தியா எல்லைக்கோடுகள் செல்கின்றன. 40 ஆண்டு காலமாக துப்பாக்கிச் சத்தங்கள் இல்லாத பகுதியாக இருந்த இந்த இடத்தில் பலிகள் ஏற்பட்டதை சகித்துக் கொள்ள வேண்டும் என்று சீனா இந்தியாவிடம் எதிர்பார்ப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்கடந்த மாதம் கூட சிக்கிமின் வடக்குப் பகுதியில் உள்ள நாதுளா செக்டார் பகுதியில், இரு நாட்டுப் படைகளைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதே நேரம் லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அருகே சீன ஹெலிகாப்டர்கள் பறந்ததாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியது.அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, போர் விமானங்களின் மூலம் எல்லைக் கண்காணிப்பு பணிகளில் இந்திய ராணுவம் தீவிரத்தைக் காட்டியது.


எல்லையில் இந்தியா தீவிரம்எல்லையில் இந்தியப்படைகள் தங்கள் நிலையில் தொடர்ந்து இருந்து வருவதையும், அப்பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவின் லடாக் பிராந்தியத்திற்கும், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய்சின் பகுதிக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு இந்தியா, சீனா
மற்றும் பாகிஸ்தான் எல்லையின்அருகே அமைந்துள்ளதால், முக்கியத்துவம் வாய்ந்தது.1962ல் இந்திய சீனா போரின் போது, மையப்பகுதியாக கல்வான் நதி இருந்தது. இதன் மூலம் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். 1958ல் அக்சாய்சின் பகுதியில் சீனா சாலையை அமைத்தது. இந்த சாலை காரகோரம் பகுதியையும், அக்சாயசின் பகுதியையும் இணைக்கிறது. பாகிஸ்தான் எல்லை நோக்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில், சாலை அமைக்கத் தொடங்கிய போது இந்தியா கண்டுகொள்ளவில்லை. ஆனால் சாலைப்பணிகள் முடிவடைந்த பின்னர் அப்போதைய பிரதமர் நேரு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போதில் இருந்து இன்றுவரை இப்பகுதியின் உரிமைக்கான கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.


உலக நாடுகள் எதிர்ப்புகொரோனா வைரஸ் காரணமாக ராஜ்ய ரீதியில் வெளி விவகாரத் தொடர்புகளை சீனாவிடம் இருந்து பல்வேறு நாடுகள் துண்டித்துக் கொண்டு வருகின்றன. ஐரோப்பிய யூனியன் பிரதேசங்களும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், சீனாவை பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், இந்தியா போன்ற பெரும்
ஜனநாயக நாட்டோடு எல்லைப் போராட்டத்தில் சீனா பிரச்னை செய்வதை ஏனைய நாடுகள் விரும்பவில்லை. இருந்தாலும் தென்சீனக்கடலில் சீனா ராணுவக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. உலகமே கொரோனாவுக்காக போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், சீனாவின் வூகான் மாநிலத்தில் இருந்து வந்த கொரோனா தொற்றில் இருந்தும், சீனாவின் எல்லை ஊடுருவலைத் தடுப்பதற்கும் என இரண்டு விதங்களில் நாம் போராட வேண்டியிருக்கிறது.-முனைவர் வைகைச்செல்வன்முன்னாள் அமைச்சர் mlamailid@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X