வேதனை: ஊரடங்கால் பாதித்த மேடை அமைப்பாளர்கள்: 100 நாட்கள் பயனற்று கிடக்கும் பொருட்கள்| Dinamalar

தமிழ்நாடு

வேதனை: ஊரடங்கால் பாதித்த மேடை அமைப்பாளர்கள்: 100 நாட்கள் பயனற்று கிடக்கும் பொருட்கள்

Added : ஜூன் 25, 2020
Share
 வேதனை: ஊரடங்கால் பாதித்த மேடை அமைப்பாளர்கள்: 100 நாட்கள்  பயனற்று  கிடக்கும் பொருட்கள்

திண்டுக்கல்: திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் அரசியல் மேடைகள் என பொது நிகழ்வுகளில் ஒலி ஒளியோ டெக்கரேசன்கள் இல்லாமல் இருக்காது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, வடமதுரை, வேடசந்தூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இத் தொழிலை நம்பியும், சார்ந்தும் 4 ஆயிரத்துக்கும் மேற்ப்டட தொழிலாளர் களின் குடும்பங்கள் இருக்கின்றன.

இவர்களின் பிரதான தொழிலே அரசு, அரசியல் விழா மேடைகள், சுப நிகழ்ச்சிகளில் ஒலி, ஒளி, பந்தல்கள் அமைப்பது, மேடை அலங்காரங்கள் செய்வதுதான். திண்டுக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் சென்று தொழில் செய்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குக்குப் பின் எந்த விழாக்களும், பொது நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. ஊரடங்கு தளர்வுக்குப் பின்னரும் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் கூட குறைந்தநபர்களுடன் எளிமையாக நடத்தப்படுகின்றன. இதனால் இத்தொழிலை நம்பி பிழைக்கும் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் முடக்கம்

'டெக்கரேஷன்' தொழில் உரிமையாளர் ஸ்ரீகுமரன்செந்தில் கூறியதாவது: ஊரடங்கு தளர்வால் அனைத்து தொழில்களும் இயங்கினாலும், எங்கள் தொழில் முடங்கியே உள்ளது. மே, ஜூன், ஜூலை மாதங்கள்தான் எங்களுக்கு சீசன் நேரம். ஆனால், ஊரடங்கால் எதுவும் செய்ய இயலாமல் கடும் பாதிப்பில் உள்ளோம். எங்களின் குரல் அரசுக்கு கேட்க வேண்டும்.

வருவாய் இழப்பு

தொழிலாளர் செல்வம் கூறியதாவது : தொழில் முடங்கியதால் வருமானத்திற்கு வழியின்றி சிரமப்படுகிறோம். எங்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது. நுாறு நாட்களுக்கும் மேலாக பொருட்கள் அனைத்து பயன்பாடின்றி கிடப்பது கண்ணீரை வரவழைக்கிறது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட வாழ்வை நகர்த்தவே கஷ்டப்படுகின்றனர். அரசு ஏதேனும் உதவினால் நல்லது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X