அமல்படுத்தப்படுமா! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் முழு ஊரடங்கு...நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமல்படுத்தப்படுமா! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் முழு ஊரடங்கு...நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா

Added : ஜூன் 25, 2020
Share

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கினை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று துவக்கத்தில் கட்டுக்குள் இருந்தது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்களால் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது.கள்ளக்குறிச்சி நகர பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார், டாக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதையொட்டி கள்ளக்குறிச்சியில் கடை திறப்பு நேரம் குறைக்கப்பட்டு, மார்க்கெட் உட்பட நான்கு வார்டுகள் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

திருக்கோவிலுாரில் குறிப்பாக கடந்த சில நாட்களாக பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பழக்கடைகளில் வேலை செய்தவர்களில், ஊர் திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது சுகாதாரத் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் திருக்கோவிலுார் தாலுகாவில் மட்டும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சொரையப்பட்டு கிராமத்தில் நேற்று 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே கிராமத்தில் ஏற்கனவே 4 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதன் மூலம் அந்த கிராமத்தில் மட்டும் 10 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் அந்த கிராமத்தையே முடக்கி நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் கூலி வேலை செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் குன்னத்துார் கிராமத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் நேற்று தோற்று உறுதி செய்யப்பட்ட ஜி.அரியூர் கல்வித் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மணம்பூண்டி வேளாண் துறை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அந்த அலுவலகத்தில் உள்ள மேலும் சிலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், திருக்கோவிலுார் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்த ஒருவருக்கும், முகையூரைச் சேர்ந்த ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டது. இதனால் அஷ்டலட்சுமி நகர் முழுவதும் தடுப்புகளைக் கொண்டு அடைக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை, வருவாய்த் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இப்படி திருக்கோவிலுார் தாலுகாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 15 பேர் கொரோனா பாதிப்பால் சிறப்பு சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.திருக்கோவிலுார் தாலுகாவில் இதுவரை 67 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது பாதிப்பின் வேகம் அதிகரித்திருப்பது சுகாதாரத் துறை, வருவாய் துறை வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகா தலைநகரில் வசிக்கும் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்தில் மட்டும் மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை மண்டலங்களுக்குள் பயணித்த நிலையில், இன்று முதல் மாவட்டத்திற்குள் மட்டுமே பயணிக்க முடியும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், தளர்வுகள் உள்ளவரை மக்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும், இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் முழு ஊரடங்கினை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X