புதுச்சேரி : புதுச்சேரி வக்கீல்களின் உரிமையை பறிக்கும் உத்தரவை ரத்து செய்யாவிட்டால், கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி வக்கீல் சங்கம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி வக்கீல் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம், நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. சங்கத் தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவி கமலினி வரவேற்றார்.இக்கூட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த மாலா என்ற வழக்கறிஞரை புதுச்சேரி அரசின் வழக்கறிஞராக சென்னை ஐகோர்ட்டிற்கு நியமித்த கவர்னரின் செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டிற்கு புதுச்சேரி அரசு வழக்கறிஞராக, புதுச்சேரி வக்கீல் சங்கத்தை சேர்ந்த காந்திராஜூக்கு, புதுச்சேரி அரசு ஓராண்டு கால பதவி நீட்டிப்பு செய்து பரிந்துரை அனுப்பிய போதும், நியாயமான காரணமின்றி, நிராகரிக்கப்பட்டு உள்ளது.புதுச்சேரி வக்கீல் சங்கத்தை சேர்ந்த பலர் சென்னை ஐகோர்ட்டில் புதுச்சேரி அரசின் கூடுதல் வழக்கறிஞர்களாக திறமையாக பணியாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தை சேர்ந்த வக்கீலை புதுச்சேரி அரசின் வழக்கறிஞராக, ஏதேச்சதிகாரமான முறையில், தன்னிச்சையாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, புதுச்சேரி கவர்னரின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மண்ணின் மைந்தர்களான புதுச்சேரி வழக்கறிஞர்களின் உரிமையை பறிக்கும் இந்த உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் புதுச்சேரி வக்கீல் சங்கம் சார்பில் கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இனி வரும் காலங்களில் சென்னை ஐகோர்ட்டிற்கு அரசு வழக்கறிஞர் மற்றும் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக, புதுச்சேரியை சேர்ந்த மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE