கும்மிடிப்பூண்டி: துார்ந்து போயிருந்த குளத்தில், கிராம மக்களின் முயற்சியால், தற்போது நீர் தேங்கி உள்ளது.
ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் தேவை குறித்தும், மழைநீரை சேமிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'நமக்கு நாமே' என, செய்தி வெளியிடப்பட்டது.பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், தனியார் அமைப்பினர் உள்ளிட்டோர், அந்தந்த பகுதியின் நீராதாரங்களை சீரமைத்தது பற்றி, செய்தி வெளியிடப்பட்டது.
அதில் ஒன்று, சிறுபுழல்பேட்டை குளம்.கும்மிடிப்பூண்டி அருகே, சிறுபுழல்பேட்டை கிராமத்தில், இரண்டு ஏக்கர் பரப்பில், திருக்குளம் என்ற பெயரில் குளம் ஒன்று உள்ளது. கிராம மக்கள் பயன்பாட்டில் இருந்த அந்த குளம், 10 ஆண்டுகளாக துார்ந்து போய், பயனற்று கிடந்தது.கடந்த ஆண்டு ஜூன் மாதம், கிராம மக்கள் ஒன்று கூடி, நிதி திரட்டி, வாடகைக்கு ஜே.சி.பி., எடுத்து, அந்த குளத்தை துார் வாரி கரையை பலப்படுத்தினர்.
மழைக் காலத்தின் போது குளம் நிரம்பியதுடன், கோடை காலத்தில் எப்போதும் வறண்டு காணப்படும் அந்த குளத்தில், தற்போது தண்ணீர் தேங்கி இருப்பதை கண்டு, கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE