சென்னை : முழு ஊரடங்கு முடியும் வரை, பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளதால், தொற்று கண்டறியும் பரிசோதனை மையங்களில், கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில், வீடுதோறும் காய்ச்சல் பரிசோதனை பணி நடக்கிறது.இதனால், தொற்று பரிசோதனை அதிகரித்துஉள்ளது. தெற்கு வட்டாரத்தில், ஒரு மண்டலத்தில், 70 முதல், 120 பேருக்கு வரை பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது தினசரி, 300 பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
காய்ச்சல், சளி, இருமல், இதில் எதாவது ஒன்று இருந்தாலும், பரிசோதனை செய்யப்படுகிறது.இதர வட்டாரங்களில், அதிக எண்ணிக்கையில் பரிசோதனை நடக்கிறது. இதனால், அடுத்த சில நாட்களுக்கு, தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.ஆனால், பரிசோதனை மையங்கள் அதிகரிக்காததால், இருக்கிற மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
அறிகுறி நபர்களை, சுகாதார ஊழியர்கள், வாகனங்களில் அழைத்துச் சென்று, பரிசோதனை செய்து, மீண்டும் வீட்டில் விடுகின்றனர்.மையங்களில், பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதால், பலர், பரிசோதனை செய்யாமல் சென்று விடுகின்றனர். மீண்டும், அவர்களை கண்டுபிடித்து, மறுநாள் பரிசோதனைக்கு வரவழைக்கின்றனர். பரிசோதனைக்கு உட்படுத்திய நபருக்கு, தொற்று இருந்தால், அவரால் பலருக்கு பரவ வாய்ப்புள்ளது.
ஆரம்ப நிலையிலே கண்டறிந்து, உரிய சிகிச்சையில் சேர்த்தால், பரவல் தடுக்கப்படும். பரிசோதனை அதிகரிப்புக்கு ஏற்ப, மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE