மடிப்பாக்கம் ஏரிக்கு மழைநீர் வந்து சேருமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மடிப்பாக்கம் ஏரிக்கு மழைநீர் வந்து சேருமா?

Added : ஜூன் 25, 2020
Share

மடிப்பாக்கம் : மடிப்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்துகள் அனைத்தும், கழிவுநீர் வருகையால் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏரியில் நீர் சேகரமாக வழியின்றி, மழைநீர் வீணாகி வருவதுடன், நிலத்தடி நீர் கிடைக்காமல், ஏரியை சுற்றியுள்ள பகுதிமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மடிப்பாக்கம் கிராமத்தில், சர்வே எண், 174/2ல் அமைந்துள்ளது பெரிய ஏரி. இந்த ஏரி, 40 ஆண்டுகளுக்கு முன், 100 ஏக்கருக்கும் மேல் பிரமாண்டமாக காட்சியளித்தது.சில ஆண்டுகளுக்கு முன், ஏரியின் பரப்பளவு, 62 ஏக்கராக மாறியது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு கும்பல், ஏரியை, 'பிளாட்' போட்டு, விற்பனை செய்ய துவங்கியது.இது குறித்து, நம் நாளிதழ் படத்துடன் விரிவான செய்தியை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அதன் பலனாக, ஏரி ஆழப்படுத்தப்பட்டது.கடந்த ஆண்டு, மடிப்பாக்கம் ஏரியை மேம்படுத்த, 1.85 கோடி ரூபாயை, மாநகராட்சி ஒதுக்கியது; அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டு, கோடையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக, நம் நாளிதழ் சார்பில், 'நமக்கு நாமே' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, சமூக நல விரும்பிகள், நீர்நிலை ஆர்வலர்களை ஊக்குவித்தது.அதன் பலனாக, மடிப்பாக்கம் ஏரியை, சபரிகிரி பவுண்டேஷன், அய்யப்பா நகர் குடியிருப்போர் நலச்சங்கம், நீர்நிலை புனரமைப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் சுத்தப்படுத்தி, அதிலிருந்த கழிவுகள், ஆகாயத் தாமரைகளை அகற்றினர்.மேலும், சென்னை மாநகராட்சியும், சீரமைப்பு பணியில் ஈடுபட்டது. அதன் பலனாக, மடிப்பாக்கம் ஏரியில் மழைநீர் சேகரமாகும் வசதி உள்ளது.

இந்த ஏரிக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து மழைநீர் சேகரமாகும் வகையில், எட்டு வழித்தடம் உள்ளது.இவற்றை இணைக்கும் வழித்தடம், மவுன்ட் - -மேடவாக்கம் சாலையில் உள்ளது.மழைநீர் வடிகாலில், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளின் கழிவுநீர் விடப்படுகிறது.இது, ஏரியில் கலந்து மாசடைந்து வந்தது. இதனால், அந்த வழித்தடங்களை, மாநகராட்சி நிர்வாகம் அடைத்தது. இதனால், கழிவுநீர் ஏரியில் கலப்பது தடுக்கப்பட்டது.

அதேநேரம், மழைநீர் சேகரத்திற்கு வழியின்றி உள்ளது.எனவே, வரும் மழைக்காலத்திற்குள், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து, எட்டு வழித்தடங்களிலும், மழைக்காலத்தில் மழைநீர் சேகரமாகும் வகையில், 'ரெகுலேட்டர்' எனப்படும் தடுப்பணை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.நமக்கு நாமே

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X