திருவொற்றியூர் : முதல்வர் அறிவிப்பிற்கு மாறாக, நிவாரண தொகை, ஒரே இடத்தில் வினியோகிக்கப்படுவதால், கொரோனா தொற்று அதிவேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில், மார்ச், 24ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. முதல் முறையாக, மாநிலம் முழுதும், ஏப்ரலில், குடும்ப அட்டை ஒன்றிற்கு, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.தற்போது, தலைநகர் சென்னை, அதை ஒட்டிய, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், தொற்று பரவல் அதிகமானதால், ஜூன், 19 - 30ம் தேதி வரை, நான்கு மாவட்டங்களில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த காலத்தை சமாளிக்க, முழு ஊரடங்கு அமலான பகுதிகளில், குடும்ப அட்டை ஒன்றிற்கு, 1,000 ரூபாய் பணம் நிவாரணமாக வழங்கப்படும் என, அரசு அறிவித்திருந்தது.தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வீடுகளுக்கே சென்று அந்த பணம் வினியோகிக்கப்படும் என, குறிப்பிடப்பட்டிருந்தது.இதன்படி, 250க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகள் உள்ள வடசென்னை பகுதியில், மூன்று நாட்களாக, நிவாரண பணம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.ஆனால், முதல்வர் அறிவிப்பிற்கு மாறாக, நியாய விலை கடைகள் மற்றும் பொது இடங்களுக்கு, குடும்ப அட்டைதாரர் வரவழைக்கப்பட்டு, வரிசையில் நிற்க வைத்து பணம் வழங்கப்படுகிறது. மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால், தொற்று பரவல்மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
இதற்கு, நியாய விலை கடைகளில் பயன்படுத்தும் இயந்திரத்தில், 'பேட்டரி சார்ஜ்' நிற்பதில்லை எனவும், மின்சாரம் இருக்கும் பகுதியில் மட்டுமே,இயந்திரத்தை இயக்க முடியும் என தெரிய வந்தது.அதன் காரணமாகவே, நியாய விலை கடைகளிலும், மின்சாரம் உள்ள பொது இடங்களிலும், மக்களை கூட்டி பணம் வினியோகிப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், பணம் வாங்க வருவோரில் பலர், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், மிக அலட்சியமாக உள்ளனர்.இதே நிலை நீடித்தால், கோயம்பேடு சந்தை போல், நியாய விலை கடைகளும், தொற்று பரப்பும் மையமாக மாறக் கூடும் என, சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE