30க்கு பின் ஊரடங்கு நீட்டிப்பா? அமைச்சர் காமராஜ் விளக்கம்| Dinamalar

தமிழ்நாடு

30க்கு பின் ஊரடங்கு நீட்டிப்பா? அமைச்சர் காமராஜ் விளக்கம்

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (3)
Share
 30க்கு பின் ஊரடங்கு நீட்டிப்பா? அமைச்சர் காமராஜ் விளக்கம்

அசோக் நகர் : ''முழு ஊரடங்கு, 30ம் தேதி வரை போதுமானது என, நம்புகிறோம். சூழலுக்கு ஏற்ப நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும்,'' என, அமைச்சர் காமராஜ் கூறினார்.

கோடம்பக்கம் மண்டலம், அசோக் நகர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அவர் அளித்த பேட்டி:அரசின் தடுப்பு நடவடிக்கையால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில், முழு ஊரடங்கு அறிவித்த பின், தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகவில்லை.

ஆனால், சிகிச்சை பெற்று வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக அளவில், தமிழகத்தில் தான் இறப்பு குறைவாக உள்ளது. சென்னை மாநகராட்சியில், 37 ஆயிரம்தெருக்கள் உள்ளன. இதில், 7,300 தெருக்களில் மட்டுமே, கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது.சென்னை முழுதும் தொற்று பரவி உள்ளது என்ற புரளியை, மக்கள் நம்ப வேண்டாம். மூன்று மாதங்களாக, விலையில்லா பொருட்கள் வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. முழு ஊரடங்கு, 30ம் தேதி வரை போதுமானது என, நம்புகிறோம்.அன்றைய சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும். இந்த ஊரடங்கிலேயே முன்னேற்றம் தெரிகிறது.

கொரோனா உலகம் தழுவிய தொற்று நோய். இந்த தொற்று நோய் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களின் உயிரிழப்பு ஏற்பட்டதால், அதற்குரிய நிவாரணம் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வீடு தேடி வரும்!

அமைச்சர் காமராஜ் கூறியதாவது:ஊரடங்கின் போது, வீடு வீடாக சென்று, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டார்.இதன்படி, நேற்று முன்தினம் நிலவரப்படி, 56 சதவீதம் பேருக்கு, நிவாரண தொகை அளித்து விட்டோம்.பயனாளிகளை ரேஷன் கடைகளுக்கு அழைத்து, நிவாரண பொருட்கள் அளிக்கக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இது போன்ற தவறுகள் நடப்பதாக புகார் வந்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வீடு தேடி சென்று, நிவாரண பொருட்கள் மற்றும் பணம் வழங்க, போதுமான ஊழியர்களை நியமனம் செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.தள்ளுமுள்ளால் தொற்று அபாயம்!கோடம்பாக்கம் மண்டலம், அசோக் நகர், இரண்டாவது அவென்யூவில் உள்ள தடை செய்யப்பட்ட பகுதியில், அமைச்சர் காமராஜ் நேற்று ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிலருக்கு வழங்கிய பின், அமைச்சர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, நிவாரணம் வழங்கும் இடத்தில் மக்கள் குவிந்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த பின், போலீசாரிடம், 'கூட்டத்தை கட்டுப்படுத்துங்கள்' எனக் கூறிவிட்டு அமைச்சர் சென்றார்.அமைச்சர் சென்றதும், நிவாரண பொருட்கள் வாங்க குவிந்த மக்களால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை கண்ட சமூக ஆர்வலர்கள், 'பொருட்கள் கிடைக்குதோ, இல்லையோ, கொரோனா தொற்று சீக்கிரமே கிடைக்கும்' என, வேதனை தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X