திடக் கழிவுகளை அகற்ற கருவி டில்லி இளைஞர்கள் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திடக் கழிவுகளை அகற்ற கருவி டில்லி இளைஞர்கள் அசத்தல்

Added : ஜூன் 25, 2020
Share
 திடக் கழிவுகளை அகற்ற கருவி டில்லி இளைஞர்கள் அசத்தல்

நீர்நிலைகளில் கொட்டப் படும் திடக் கழிவுகளை அகற்ற, எளிய வடிவமைப்புடன் குறைந்த விலையில் ஒரு சாதனத்தை கண்டுபிடித்து, டில்லி இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.இந்தியாவில், ஆறு, ஏரி, கால்வாய், குளம் போன்ற நீர்நிலைகளில் கொட்டப்படும் திடக் கழிவுகளால் ஏற்படும் மாசு பிரச்னை மோசமடைந்து வருகிறது.

இதனால், நீர் மாசுபடுவது மட்டுமல்லாமல், நீர்வாழ் உயிரினங்களும் அழிவை சந்திக்கின்றன. மேலும், பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், இதற்கான ஒரு தீர்வை, டில்லி இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள, 'தி ஜார்ஜியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி'யில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் கேஷவ் வாசுதேவா என்பவரும், டில்லியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல் லுாரியில், கணிதம் பட்டப்படிப்பு பயின்று வரும் அனிருத் பாஷ்யம் என்பவரும், 'நீர்' என்ற திட்டத்தை இதற்காக வகுத்துள்ளனர்.

இதுகுறித்து, அந்த இளைஞர்கள் கூறியதாவது:நீர் நிலைகளில் இருக்கும் கழிவுகளை பிரித்தெடுக்க, தானியங்கி கருவியை வடிவமைத்து உள்ளோம். நீரின் மேல் மிதக்கும் அல்லது சற்று மூழ்கிக்கிடக்கும் திடக் கழிவுகளை அகற்ற, 'கன்வேயர் பெல்டு'களுடன் இந்த சாதனம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஒரு கன்வேயர் பெல்டு, நீரில் இருந்து திடக் கழிவுகளை எடுக்கும்; மற்றொரு கன்வேயர் பெல்டு, அந்த கழிவுகளை கரையோரத்தில் குவிக்கும். எளிய வடிவமைப்புடன் குறைந்த விலையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு, குறைந்த அளவிலான மின்சாரம் மட்டுமே தேவைப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இவர்கள் உருவாக்கிய இந்த சாதனம், தற்போது, டில்லியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டுள்ள அனிருத் பாஷ்யம், தமிழகம் உட்பட அனைத்து தென் இந்திய மாநிலங்களும், இந்த கருவி மூலம் பயன்பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.இந்த இளைஞர்கள், கழிவுகள் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்யும் திட்டத்திலும், ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டங்களுக்கு நிதியுதவி கோரி, பில் கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களிடம், இவர்கள் முறையிட்டுள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X