போலீஸ், செவிலியர் உள்பட 41 பேருக்கு கொரோனா| Dinamalar

தமிழ்நாடு

போலீஸ், செவிலியர் உள்பட 41 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 25, 2020
Share

ஆத்தூர்: ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், போலீஸ், செவிலியர், கர்ப்பிணி, குழந்தைகள் உள்பட, நேற்று ஒரே நாளில், 41 பேருக்கு, 'கொரோனா' தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும், 31 வயது செவிலியருக்கு, நேற்று முன்தினம், 'கொரோனா' தொற்று ஏற்பட்டது. நேற்று, அவரது, 38 வயது கணவர், மூன்று வயது பெண் குழந்தை, ஒரு வயது ஆண் குழந்தை, வீட்டில் பணிபுரிந்த, 50 வயது பெண் என, நான்கு பேருக்கு தொற்று உறுதியானது.


* ஆத்தூர், கடைவீதியில், நகை கடை வைத்துள்ள, ராஜாஜி காலனியைச் சேர்ந்த, 40 வயது உரிமையாளர், கடையில் பணிபுரிந்த இரு பெண் உள்பட மூவருக்கு, நேற்று முன்தினம் தொற்று இருந்தது. அவர்களுடன் தொடர்பில் இருந்த, 20 பேருக்கு பரிசோதனை செய்தனர். அதில், கடை உரிமையாளரின், 33 வயது மனைவி, 68 வயது தந்தை, 65 வயது தாய், 70 வயது பெரியப்பா, 65 வயது பெரியம்மா, கடையில் பணிபுரிந்த, வ.உ.சி., நகர், 30 வயது பெண், திருவள்ளுவர் தெரு, 30 வயது ஆண், பழையபேட்டை, 28 வயது கார் டிரைவர், முல்லைவாடி, 40 வயது ஆண், கல்லேரிப்பட்டி, 45 வயது ஆண், மஞ்சினி, 30 வயது பெண் என, 11 பேருக்கு தொற்று உறுதியானது.


* கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த, ரிக் வண்டி, லாரி டிரைவர்களான, சீலியம்பட்டி புதூர், 44 வயது, 37 வயது, கந்தசாமிபுதூர், 26 வயது, ஈச்சம்பட்டி, 40 வயது; சீலியம்பட்டி, செங்குட்டை, 44 வயது; மல்லியக்கரை, 34 வயது; 30 வயது, 28 வயது, 40 வயது, சொக்கநாதபுரம், மோட்டூர், 35 வயது, சீலியம்பட்டி, 33 வயது என, 11 ஆண்களுக்கு தொற்று உறுதியானது. அத்துடன், கல்லாநத்தம், வடக்கு காடு, 29 வயது ஆண்; கல்லாநத்தம், தெற்கு தெரு, 29 வயது ஆண் டிரைவருக்கும் உறுதியானது.


* பெத்தநாயக்கன்பாளையத்தில், கடந்த, 15ல், கள்ளத்தொடர்பில் பெண் கொல்லப்பட்ட வழக்கில் கைதான, 42 வயதுடையவருக்கு தொற்று இருந்தது. அவரை கைது செய்து, ஏத்தாப்பூர் ஸ்டேஷனுக்கு அழைத்துவந்த, 31 வயது போலீசாருக்கு தொற்று உறுதியானது.


* சென்னையில் இருந்து வந்த, பெத்தநாயக்கன்பாளையம், 10வது வார்டு, 51 வயது ஆண்; நான்காவது வார்டு, 39 வயது கணவர், 30 வயது மனைவி; ஆறாவது வார்டு, 21 வயது ஆண் ஆகியோருக்கும் தொற்று உறுதியானது. அதேபோல், சென்னையில் இருந்து வந்த, தம்மம்பட்டி, நாகியம்பட்டி, உப்புஓடை புதூரைச் சேர்ந்த, 26 வயது ஆண், தம்மம்பட்டி, 34 வயது ஆண், கொண்டையம்பள்ளி, 18 வயதுடைய, ஆறு மாத கர்ப்பிணி, 74 கிருஷ்ணாபுரம், 34 வயது ஆண், பச்சமலை, 25 வயது ஆண், கர்நாடகாவில் இருந்து வந்த, உலிபுரம்புதூர், 37 வயது ஆண் ஆகிய ஆறு பேருக்கு, தொற்று உறுதியானது.


* தலைவாசல் அருகே, மணிவிழுந்தான் ஊராட்சி, முட்டல் ஆரம்ப சுகாதார நிலைய, 25 வயது செவிலியர், காட்டுக்கோட்டையைச் சேர்ந்த, 21 வயது பெண்ணுக்கும் உறுதியானது. இதன்மூலம், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், ஒரே நாளில், 41 பேருக்கு தொற்று உறுதியாகி, அவர்கள் வசித்த பகுதிகளில், சுகாதார பணியாளர்கள், கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் உள்பட 24 பேருக்கு பரிசோதனை: பெத்தநாயக்கன்பாளையம், ஏழாவது வார்டைச் சேர்ந்தவர் மணி, 55. இவருடன், 42 வயது மோட்டார் மெக்கானிக் கள்ளத்தொடர்பில் இருந்தார். அவர்கள் இடையே பண தகராறில், கடந்த, 15ல் மணி கொல்லப்பட்டார். மெக்கானிக்கை, 18ல், போலீசார் கைது செய்து, மருத்துவ பரிசோதனை செய்தபோது, தொற்று இருப்பது தெரிந்தது. 19 முதல், தற்போது வரை, ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதில், 31 வயது போலீசாருக்கு, தொற்று இருப்பது நேற்று தெரிந்தது. இதனால், இன்ஸ்பெக்டர் உள்பட, 24 போலீசாருக்கு, மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்துள்ளனர். இன்று, அதன் அறிக்கை வெளியான பின், ஸ்டேஷனுக்கு செல்ல, மாவட்ட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவர்: தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி, முட்டல் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 25 வயது செவிலியருக்கு தொற்று ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவர், செவிலியர், பணியாளர் என, ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். சுகாதார நிலையம் முழுதும் கிருமி நாசினி தெளித்த பின், மற்ற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர், செவிலியர், இங்கு தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

195 பேர் தனிமை: சென்னை, மும்பை, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள், 'கொரோனா' தொற்று பாதிப்பு நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, ஆத்தூர் நகரில், 340 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில், 14 முதல், 28 நாள் தனிமையில் இருந்த, 145 பேருக்கு, பாதிப்பு இல்லை. தற்போது, 195 பேர் தனிமையில் உள்ளனர். அவர்களை, நகராட்சி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நேற்று, 20 பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X