கொரோனா பரவலை தடுக்க சேலத்திற்கு தேவை முழு ஊரடங்கு| Dinamalar

தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்க சேலத்திற்கு தேவை முழு ஊரடங்கு

Added : ஜூன் 25, 2020
Share

சேலம்: சேலத்தில், அறிகுறியே தெரியாமல், அதிவேகமாக கொரோனா தொற்று பரவி வருவதால், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச், 25 முதல், ஊரடங்கு அமலில் உள்ளது. முதலில் ஐந்து பேருக்கு வந்த தொற்று படிப்படியாக உயர்ந்து வேகமாக பரவியது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தாலும் மக்கள் ஒத்துழைப்பு இல்லை. இதற்கிடையில் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்ததும், வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் குவியத்தொடங்கினர். இதில் பலரும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்ட சாலைகளில் வராமல், கிராம சாலைகள், குறுக்கு சாலைகளில் புகுந்து, சேலத்துக்குள் வந்துள்ளனர். இவர்களில் பலருக்கு தொற்று பாதிப்பு இருந்துள்ளது. அதேநேரம், தளர்வால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு, மக்கள் கூட்டமாக சென்று வரும் சகஜநிலை திரும்பியது. பெரும்பாலான இடங்களில், சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவதை பின்பற்றவில்லை. தற்போது, அதிவேகமாக தொற்று பரவி வருகிறது. ஒரு வாரமாக, தினமும், 20 முதல், 70 பேர் வரை, பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மட்டும், 94 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஸ் பயணம்: குறிப்பாக, அரசு பஸ் பயணம், பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. தொடக்கத்தில், ஒவ்வொரு முறை கிருமி நாசினி தெளித்து, கையுறை, முகக் கவசம் உள்ளிட்டவை அணிந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டன. நாளடைவில் அலட்சியப்போக்கு ஏற்பட்டதால், கும்பலாக ஏறி, இறங்குவது, பஸ்சில் பயணித்தவர் யார் என்ற விபரம் தெரியாததும், பரவலுக்கு சாதகமாக மாறியுள்ளது. அஸ்தம்பட்டி பணிமனையைச் சேர்ந்த டிரைவர், கண்டக்டருக்கு பரவிய தொற்றால், உடன் பணிபுரிந்த, 600க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள், இதுவரை பணிபுரிந்த பஸ்சில் ஏறி, இறங்கியவர்களின் விபரம் இல்லாததால், அவர்கள் மூலம் பலருக்கும் பரவும் அபாயம் உள்ளது. அதனால், சமூக பரவலாக மாறாமல் இருக்க, உடனே, சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை பணியாளர்கள் கூறியதாவது: தொற்று வேகமாக பரவினால், அனைவருக்கும் சிகிச்சையளிப்பது சிக்கலாகும். பலி எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தான், விழிப்புணர்வுடன், பொது வெளிக்கு வராமல், தனித்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. இதை யாரும் உணராமல், அலட்சியப்போக்குடன் உள்ளனர். அடுத்த நிலைக்கு பரவாமல் இருக்க, உடனே முழு ஊரடங்கு அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X