கொரோனா பரவல் தடுக்க தீவிர முயற்சி: கிராமங்கள் தோறும் கண்காணிப்பு குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல் தடுக்க தீவிர முயற்சி: கிராமங்கள் தோறும் கண்காணிப்பு குழு

Added : ஜூன் 25, 2020
Share

பொள்ளாச்சி:பெள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களில், கொரோனா தொற்று பரவுவதை தவிர்க்க கிராம கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படுகின்றன.தெற்கு ஒன்றிய ஊராட்சிகளில் கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர்லட்சுமி தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி தலைவர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில், கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அனைத்து ஊராட்சிகளிலும், ஊராட்சி தலைவரை தலைமையாக கொண்டு, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இக்குழுவில், ஊராட்சி செயலர்கள், வி.ஏ.ஓ.,க்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், சுயஉதவிக் குழுவினர், தன்னார்வலர்கள் இடம் பெறுவர். வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து கிராமங்களுக்கு வருவோரால் நோய் பரவும் அபாயம் இருப்பதால், வருவோரை கண்காணித்து, சுகாதார துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் அளிப்பது குழுவின் முக்கிய பணியாகும்.அனைத்து கிராம மக்களும், 100 சதவீதம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதைக் கண்காணிக்க, குக்கிராமங்கள் அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். அந்தந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பொறுப்பில், முகக்கவசம் அணியாதோரிடம் இருந்து தலா, 100 ரூபாய் அபராதம்வசூலிக்கப்படும்.அபராதம் வசூலிக்கும் விபரங்களை, ஒன்றிய அலுவலகத்துக்கு தினமும் அனுப்ப வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட வீட்டினர் வெளியில் நடமாடாமல் கண்காணிப்பது, பஸ்களில் நோய் பரவல் தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். சுகாதார பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருப்பதை உறுதி படுத்த வேண்டும். கடைகள், உணவகங்கள், மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.கிராமங்களில் கிருமிநாசினி தெளிப்பது, சுகாதார பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதை கண்காணிப்பது என பல்வேறு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை, கண்காணிப்பு குழுவினர் மேற்கொள்ள வேண்டும் என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X