இயற்கை விவசாயம் மீது ஆசை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை விவசாயம் மீது ஆசை!

Added : ஜூன் 25, 2020
Share

சிரிப்பு நடிகர் செந்தில்: என்னை நடிகராக தான் மக்களுக்கு தெரியும். உண்மையில் நான் விவசாயி. எங்க குடும்பம் விவசாயக் குடும்பம். பல வருஷமா இயற்கை விவசாயம் செய்திருக்கேன். இந்த விஷயம் பெரிசா யாருக்குமே தெரியாது.

இப்போ விவசாய வேலைகள் குறைஞ்சிருக்குதே தவிர, அதை முற்றிலுமா கை விடலை. திரும்பவும் விவசாயத்தில தீவிரமா இறங்கப் போறேன்.- என் பூர்வீகம் ராமநாத புரம் மாவட்டம். சினிமா வுக்கு வர்றதுக்கு முன்னாடி ஊர்ல முழுநேரமா விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகும் விவசாயத்தோட தொடர்பு இருந்துச்சு. கடந்த, 1990-களில் என் சினிமா பயணம் மிகச் சிறப்பா இருந்துச்சு. அந்த தருணத்துல சினிமாவுல சம்பாதிச்ச பணத்துல, சென்னைக்குப் பக்கத்துல இருக்கிற படப்பையில அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கினேன்.

கடந்த, 1993-லிருந்து அங்கே இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். அதுவும் ஒருங்கிணைந்த பண்ணையம். ஆடு, மாடு, கோழி வளர்ப்போட விவசாயம், 'ஜம்'முன்னு நடந்துச்சு. கால்நடைகளோட சாணத்தை மக்கவெச்சு செடிகளுக்கு உரமா போடுவேன். எந்த ரசாயன உரங்களையும் போட மாட்டேன். தோட்டத்துல ஒரு பெரிய கிணறு இருக்கு. அதுல எந்தக் காலத்துலயும் தண்ணி வத்தாது. இந்த கோடைக்காலத்துல கூட கிணத்துல தண்ணி இருக்கு.தொடக்கத்துல தக்காளி, வெண்டை, கத்திரி, பூசணி, புடலை, அவரை, சுரைக்காய்னு நிறைய காய்கறிகள், பூ வகைகள் சாகுபடி செஞ்சேன்.

மா, தர்ப்பூசணி, பப்பாளி, சப்போட்டா, எலுமிச்சை, கொய்யானு பழ மரங்களும் வச்சிருந்தேன்; தென்னையும் உண்டு. வாரத்துக்கு ஒருமுறை அல்லது ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அங்க போயிடுவேன். எங்க வீட்டுத் தேவைக்கான காய்கறி முழுமையா அங்கேயே கிடைச்சுச்சு.தோட்டத்துலயே தங்கறதுக்கு ஏதுவா ஒரு ஓட்டு வீடும் இருந்துச்சு. ஒரு கட்டத்துல என்னால நேரடியா களத்துல இறங்கி வேலை செய்ய முடியலே. வேலையாட்களை வச்சுத்தான் பாத்துக்கிட்டேன்.காய்கறிகளோட சேர்த்து தேக்கு, வேம்புன்னு நிறைய மரங்களையும் வளர்த்தேன்.

எல்லாமே நல்லா பலன் கொடுத்துச்சு. திடீர்னு வேலையாட்கள் கிடைக்காமப் போயிட்டாங்க. வழக்கமா வர்றவங்க வேற வேற வேலைகளுக்குப் போகத் தொடங்கிட்டாங்க. அதை ஓரளவுக்கு சமாளிச்சேன். ஆனா, 2016ல வீசுன வர்தா புயலை தாக்குப்பிடிக்க முடியலே. என் தோட்டத்துல கடுமையான சேதம். புளியமரம், சப்போட்டா, தேக்கு, தென்னைன்னு எல்லா மரங்களும் வேரோட சாஞ்சிருச்சு.கொரோனா முடிஞ்சதுமே தோட்டத்துல விழுந்து கிடக்கிற மரங்களை அப்புறப்படுத்தப் போறேன். தோட்டத்தைச் சமன்படுத்தி, மறுபடியும் காய்கறிகள், பழ மரங்களை வளர்க்கப் போறேன். மறுபடியும் இயற்கை விவசாயப் பணிகளில் ஈடுபட முடிவெடுத்திருக்கேன்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X