செய்தி சில வரிகளில்...| Dinamalar

செய்தி சில வரிகளில்...

Added : ஜூன் 25, 2020
Share

2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம், சோபோர் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது, துப்பாக்கிகளால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

'மாஜி' அமைச்சர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், மெஹபூபா தலைமையில் இருந்த அரசில் அமைச்சராக இருந்தவர், சவுத்ரி லால் சிங். பா.ஜ.,வை சேர்ந்த இவர், 2018ல், அக்கட்சியிலிருந்து விலகினார். கதுவாவில், இவர் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளைக்காக, நில மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இது பற்றி விசாரித்து வரும் சி.பி.ஐ., சவுத்ரி லால் சிங் மீது, வழக்கு பதிவு செய்துள்ளது.

6 வாகனங்களுக்கு நக்சல்கள் தீ வைப்பு

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், குகனார் பகுதியில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, நக்சல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை சாலை பணிகள் நடக்கும் இடத்துக்கு வந்த நக்சல்கள், அங்கிருந்த இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்கள் உட்பட, ஆறு வாகனங்களுக்கு தீ வைத்து, தப்பியோடினர். இதில், ஆறு வாகனங்களும் சேதமடைந்தன.

கொரோனாவுக்கு 3 போலீசார் பலி

மும்பை: மஹாராஷ்டிராவில், கொரோனா பரவல் மிகவும் அதிகமாக உள்ளது. மாநிலத்தில் நேற்று, மூன்று போலீசார், வைரஸ் தொற்றுக்கு பலியாயினர். இதையடுத்து, கொரோனாவுக்கு பலியான போலீசாரின் எண்ணிக்கை, 54 ஆக உயர்ந்தது. இதில், 34 போலீசார், மும்பையை சேர்ந்தவர்கள்.மஹாராஷ்டிராவில், 4,200க்கும் அதிகமான போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,000க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை

தரன் தாரன்: பஞ்சாப் மாநிலம், தரன் தாரன் மாவட்டம், கைரான் கிராமத்தை சேர்ந்தவர், பிரிஜ் லால், 55. நேற்று காலை, பிரிஜ் லால், அவரது மகன், இரண்டு மருமகள்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். வீட்டு வேலைக்காரரும், கொலை செய்யப்பட்டிருந்தார். இவர்களை கொலை செய்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X