மதுரையில் பரவும் கொரோனா; சென்னையை விஞ்சும் அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் பரவும் கொரோனா; சென்னையை விஞ்சும் அபாயம்

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share

மதுரை; மதுரையில், கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. சென்னை போன்ற நிலைமை வராமல் தடுக்க, முதல்வர் இ.பி.எஸ்., நேரடியாக கவனம் செலுத்த வேண்டும்.தென் மாவட்ட தலைநகராக விளங்கும் மதுரையில் கொரோனா பாதிப்பு திடீர் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தினமும, 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு பட்டியலில் இடம் பிடிக்கின்றனர். நேற்று முன்தினம் பாதிப்பு, 1,000த்தை கடந்தது.இதுவரை இல்லாத புதிய உச்சமாக, நேற்று ஒரே நாளில், 200க்கும் மேற்பட்டோரை கொரோனா தாக்கியது.மாவட்டத்தின் மொத்த பாதிப்பில், 80 சதவீதம், மதுரை நகரில் நேர்கிறது.இதனால் தலைநகரின் நிலை, துாங்கா நகருக்கும் தொற்றிவிடும் அபாயச் சூழல் உருவாகியுள்ளது.

இது, மதுரைவாசிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் மட்டும் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, பிற மாவட்டங்களில் இருந்து டாக்டர், நர்ஸ், சுகாதாரப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இப்போதோ அனைத்து மாவட்டங்களிலும், படிப்படியாக பாதிப்பு உயர்கிறது. எனவே, பிற மாவட்டங்களில் இருந்து ஊழியர்களை பெறுவது சாத்தியமற்றது.பரிசோதனை வசதியிலும், சென்னையை காட்டிலும், மதுரை, 10 மடங்கு பின்தங்கியுள்ளது. இங்குள்ள, ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகள் மூலம் தினமும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சோதிக்கப்படுகின்றனர்.

பரிசோதனை செய்வதிலும், மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. மக்கள் தொகை குறைந்த மாவட்டங்களில் கூட, மதுரையை விட அதிக பரிசோதனை நடந்துள்ளது. கொரோனா வார்டில், தினமும் ஐந்து சந்தேக மரணங்கள் நடக்கின்றன. மதுரையின் பரப்பளவு, மக்கள் தொகையை, சென்னையோடு ஒப்பிட்டால் மிகக்குறைவு தான்.

சென்னையில் ஒரே நாளில், 1,500 பேருக்கு பாதிப்பு என்றால், மதுரையில், 150 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அது சென்னை பாதிப்பிற்கு சமமானதே.எனவே, அரசு தீவிர கவனம் செலுத்தி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா நோயாளிகளை கவனிப்பதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, எதிர்கால சவால்களை சமாளிக்க, முதல்வர் இ.பி.எஸ்., நேரடியாக தலையிட வேண்டியது அவசியம்.

இல்லையென்றால், மதுரை சென்னையாவதை தடுப்பது அரிதாகும்.மீண்டும் நடக்கக் கூடாது தவறு!சென்னையில் நடந்த தவறுகள் மதுரையில் நடக்கக் கூடாது. தவறுகள்: கொரோனா அறிகுறியுடன் பரிசோதனைக்கு வருபவர்களிடம், மாதிரிகளை எடுத்த பின், அடுத்த நொடியே அவர்களைத் தனிமைப்படுத்தாமல், உலவ விட்டது. பரிசோதனையில், 'பாசிட்டிவ்' வந்தால் மட்டுமே அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர் பலசரக்கு, காய்கறி, ரேஷன் கடைகளைத் திறந்து விட்டது. தொற்று பரவியதற்கு, இந்த நடவடிக்கை மிகப் பெரிய காரணமாக அமைந்து விட்டது. வாழ்வாதாரம் என்ற போர்வையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், சென்னை மக்கள் இப்போது பரிதவிக்கின்றனர் முதன்முதலாக, ௨௧ நாள், 'லாக்டவுன்' சமயத்திலேயே, வெளிநாட்டிலிருந்து, வௌி மாநிலத்திலிருந்து வந்தவர்களை, தைவான் நாடு போல, கண்ணும் கருத்துமாகத் தனிமைப்படுத்தி இருந்தால், தமிழகம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது இந்த நடைமுறையை, இப்போதாவது மதுரை உட்பட மற்ற மாவட்டங்களில் பின்பற்ற வேண்டும். மற்ற மாவட்டங்களிலிருந்து வருவோரை, கட்டாயத் தனிமைப்படுத்தி, அவர்கள் தங்க வசதியான அறைகளைக் கொடுத்து, பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தால், உள்ளூர் மக்களிடம் தொற்று பரவவே பரவாது சுகாதாரப் பணியாளர்கள், போலீசார், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர், கவனமான முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்ஒருவரைத் தொட்ட கையாலேயே மற்றவரைத் தொடுவது, பரிசோதிப்பது, கவச உடை அணியாமல், கையால் தன் உடலைத் தொட்டுக் கொள்வது ஆகியவை மிகப் பெரிய ஆபத்தான நடவடிக்கைமிகவும் சிரமமான பாதுகாப்புப் பணியை, வேறு வழியில்லாமல், கவனத்துடனேயே கையாள வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால், தொற்றை விரட்டி விடலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X