பல்கலை கல்லூரி... அரசு கல்லூரியாகுமா? புதிய பாடப்பிரிவு துவங்குமென எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை கல்லூரி... அரசு கல்லூரியாகுமா? புதிய பாடப்பிரிவு துவங்குமென எதிர்பார்ப்பு

Added : ஜூன் 25, 2020
Share
 பல்கலை கல்லூரி... அரசு கல்லூரியாகுமா? புதிய பாடப்பிரிவு துவங்குமென எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சியிலுள்ள, பாரதியார் பல்கலை கல்லுாரியை, அரசு கல்லுாரியாக மாற்றி புதிய பாடப்பிரிவுகள் துவங்கினால் மாணவர்கள் பயன்பெற முடியும்.பொள்ளாச்சி பகுதியில், ஆண்டுதோறும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெற்று, கல்லுாரி படிப்பை தொடர்கின்றனர். வளர்ந்து வரும் நகரமாக உள்ள பொள்ளாச்சியில், அரசு கலைக்கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரிகள் இல்லாததால், தனியார் கல்லுாரியை நாடும் நிலை இருந்தது.
இந்நிலையில், பொள்ளாச்சி சமத்துார் ராம ஐயங்கார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கடந்த, 2017ம் ஆண்டு பாரதியார் பல்கலை உறுப்புக்கல்லுாரி துவங்கப்பட்டது.முதற்கட்டமாக, பி.காம்.,(சிஏ), பி.காம்., (பிஏ), பி.பி.ஏ., பி.எஸ்.சி., (கணிதம்), பி.ஏ., (ஆங்கிலம்) ஆகிய பாடப் பிரிவுகள் துவங்கப்பட்டன. தற்போது, கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடக்கிறது. வரும் கல்வியாண்டில் அரசு கல்லுாரியாக மாற்றி, புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் காத்திருக்கின்றனர்.பொள்ளாச்சியிலுள்ள பல்கலை கல்லுாரி, அரசு கல்லுாரியாக மாற்றப்பட உள்ளதால், புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படாமல் உள்ளன. கல்லுாரி துவங்கி, மூன்று ஆண்டுகள் கடந்தும், புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படாததால், இருக்கும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்க வேண்டிய சூழல் உள்ளது.பாடப்பிரிவுகளில் குறிப்பிட்ட அளவே மாணவர்கள் சேர்க்க முடிகிறது. கல்லுாரிகள் துவங்க அரசு நடவடிக்கை எடுக்கும் போது, பொள்ளாச்சி அரசு கல்லுாரியாக மாற்றவும்; புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் அரசு நடவடிக்கை எடுத்தால் மாணவர்கள் பயன்பெற முடியும்.
கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது:கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரிகளை அரசு கல்லுாரியாக மாற்றம் செய்யப்படும் என, சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். அதில், 14 கல்லுாரிகள் அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டுள்ளது.அதில், வால்பாறையிலுள்ள பாரதியார் பல்கலை கல்லுாரி, அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று, பொள்ளாச்சியிலுள்ள பல்கலை கல்லுாரியும், அரசு கல்லுாரியாக மாற்ற வேண்டும்.இவ்வாறு, கல்வி ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X