உழவர் சந்தை முன் ஆக்கிரமிப்பு கடைகள்: வர்த்தகம் பாதிப்பால் விவசாயிகள் அதிருப்தி| Dinamalar

உழவர் சந்தை முன் ஆக்கிரமிப்பு கடைகள்: வர்த்தகம் பாதிப்பால் விவசாயிகள் அதிருப்தி

Added : ஜூன் 26, 2020
Share
 உழவர் சந்தை முன் ஆக்கிரமிப்பு கடைகள்: வர்த்தகம் பாதிப்பால் விவசாயிகள் அதிருப்தி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி உழவர் சந்தை முன், ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள, 60க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி கொண்டு வந்து விற்கின்றனர்.இந்நிலையில், உழவர் சந்தை முன், தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்புகளால், வியாபாரம் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது:உழவர் சந்தை முகப்பு பகுதி சுகாதாரமின்றி காட்சியளிக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில், தள்ளுவண்டி கடைகள், ரோட்டோர கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. காலையில் சந்தைக்கு ரோட்டை ஆக்கிரமித்து, வியாபாரிகள் சிலர் காய்கறி மற்றும் தேங்காய் கடைகள் போடுகின்றனர்.சந்தைக்கு முன் உள்ள கடைகளிலேயே மக்கள் பொருட்கள் வாங்கிச் செல்வதால், உழவர் சந்தையில் வர்த்தகம் பாதிக்கிறது.ஊரடங்கு காரணமாக போதிய பஸ் வசதி இல்லாத நிலையில், பல்வேறு இன்னலுக்கு இடையே காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகிறோம். ஆனால், இதுபோன்ற பிரச்னையால், மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது.இது குறித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததும், ஒரு நாட்கள் மட்டும் கடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதன் பின், அரசியல் தலையீட்டால் மீண்டும் கடைகள் ஆக்கிரமித்துள்ளன.ரோட்டோர கடை வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஏற்படுத்தி கொடுத்து, உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வரும் விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உழவர் சந்தையையொட்டி, 'செப்டிக் டேங்க்' லாரிகள், வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சந்தைக்கு வருவோர் சிரமப்படுகின்றனர்.எனவே, 'செப்டிக் டேங்க்' லாரிகளுக்கு மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X