கொரோனா பாதித்த போலீசாருக்கு மனநல கவுன்சிலிங் : | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்த போலீசாருக்கு மனநல கவுன்சிலிங் :

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (2)
Share
 கொரோனா பாதித்த போலீசாருக்கு மனநல கவுன்சிலிங்  :

மதுரை : தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரும் அதற்கு தப்பவில்லை. இதுவரை 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பணிச்சுமை, உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு கொரோனாவும் சேர்ந்துள்ளதால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் 'போலீஸ் நிறைவு வாழ்வு திட்டம்' மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாருக்கும், குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது என்கிறார் இதன் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன். தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:


* கொரோனவால் பாதித்தோருக்கு கவுன்சிலிங் அவசியமா?ஆமாம். அதனால்தான் கொரோனா பாதித்த நாள் முதல் கவுன்சிலிங் கொடுக்கும் பணியை துவங்கி விட்டோம். கொரோனா பாதிப்பது என்பது உடல்நல பிரச்னை மட்டுமல்ல. மனநலம் சார்ந்த பிரச்னையும்கூட. ஒருவருக்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் அவருக்கு 'பாசிட்டிவ்' என்று வந்ததும், அவரது மனநிலை மாறும். அடுத்தடுத்து பரிசோதனைக்கு பிறகு மருத்துவமனைக்கு செல்லும்போது அங்கு காணும் காட்சிகள் மேலும் பயத்தை உண்டு பண்ணும். இதனால் நம் குடும்பம் என்னவாகும் என்ற அச்சம், பொருளாதார ரீதியாக எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் ஆளாகின்றனர்.


*இது எந்த அளவிற்கு பயனளிக்கும்?நோயைவிட பயம்தான் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். அந்த பயத்தை போக்க டி.ஜி.பி., திரிபாதி ஏற்பாட்டின்படி, கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். மருத்துவமனையில் இருக்கும் போலீசாரை தொடர்பு கொண்டு பேசி நம்பிக்கையூட்டுகிறோம். பிறகு அவர்களது குடும்பத்தினரிடமும் பேசுகிறோம். இது நல்ல பலனை தந்து கொண்டிருக்கிறது.


*கவுன்சிலிங்கை ஏற்கும் மன நிலையில் போலீசார் இருக்கிறார்களா?டிஸ்சார்ஜ் ஆன போலீசாருக்கு கவுன்சிலிங் பயிற்சி அளித்து, அவர்களை பாதிக்கப்பட்டவர்களுடன் பேச வைக்கிறோம். அவர் தனது அனுபவத்தை பகிரும்போது, பாதிக்கப்பட்டவருக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. தவிர ஏற்கனவே நிறைவு வாழ்வு திட்டத்தின்கீழ் கவுன்சிலிங் அளித்து வரும் போலீசாரையும் இதற்கு பயன்படுத்த உள்ளோம். அதோடு போலீசாருக்கு ஏற்கனவே உள்ள துறை ரீதியான குறைகளுக்கும் தீர்வு காண முயற்சித்து வருகிறோம். இதன்மூலம் அவர்களுக்கு புதிய நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுகிறது. இது கொரோனா பாதிப்பில் இருந்து மீள உதவுகிறது.


*போலீசார் அதிகம் பாதிக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை?பாதிக்கப்பட்ட போலீசாரை கண்காணிக்க தனி இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. அதில் தினமும் 'அப்பேட்' செய்த விபரம் எனக்கு அனுப்பப்படும். எங்கள் குழு சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய வழிமுறைகளை கூறுகிறோம். இதற்காக மாநில அளவில் ஏ.டி.ஜி.பி., தாமரைகண்ணன், எஸ்.பி., பாஸ்கரன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் முயற்சியால் போலீசாருக்கு சிகிச்சை அளிக்க ரயில்வே மருத்துவமனை ஒதுக்கப்பட்டது.

அடுத்ததாக திருமண மண்டபம் ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாவதால் அதற்கேற்ப கவுன்சிலிங் அளிக்க ஆட்களை தேர்வு செய்து வருகிறோம். கல்லுாரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். நாம் எச்சரிக்கையுடனும், தகுந்த பாதுகாப்புடனும் இருந்தாலே போதும். கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம். இவ்வாறு கூறினார்.Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X