தேனியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவது கடுமையாக்கப்படுமா?| Dinamalar

தமிழ்நாடு

தேனியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவது கடுமையாக்கப்படுமா?

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020
Share
தேனியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவது கடுமையாக்கப்படுமா?

தேனி: மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயங்கின. அவசியமின்றி சகஜமாக வெளியில் சுற்றினர். எனவே தொற்று தடுப்பில் சிக்கல் உள்ளதால் போலீசார் உத்தரவை கடுமயைாக அமல்படுத்த வேண்டும்.


தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தால் நேற்று முன்தினம் மாலை முதல் தேனி, போடி, சின்னமனுார், கம்பம், கூடலுார் நகராட்சி பகுதிகளில் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமலானது. பெரியகுளத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ளது. உயிரை பாதுகாக்க அவசியமின்றி யாரும் வெளியில் வர வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் அத்தியாவசிய, அவசர பணிகள் தடைபடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளை அரசு வழங்கியது.

ஆனால் ஆபத்தை உணராது கட்டுப்பாட்டை மீறி தேனியில் நேற்று காலை வழக்கம் போல் வாகனங்கள், ஆட்டோக்கள், மினி பஸ்கள் இயக்கப்பட்டன. டூவீலர்களில் பலர் பயணித்தனர். தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து போலீசார், 'அவசியமின்றி வெளியில் வராதீங்க. பயணிகள் ஆட்டோ, மினி பஸ் இயங்க அனுமதி இல்லை. மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே ஆட்டோ இயங்க வேண்டும். விதிமீறி ஓடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் 15 நாட்களுக்கு மீட்க முடியாது ' என எச்சரித்து கொண்டே இருந்தனர்.

சில வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் போக்குவரத்து குறைந்தபாடில்லை. ஒருசில கடைகளும் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டன.மார்க்கெட்தேனி என்.ஆர்.டி., ரோடு காமராஜர் பூங்காவில் திடீரென வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்தனர். அங்கு பலரும் முகக்கவசம் இன்றி வந்தனர். பூங்கா ரோட்டில் தெருவோர கடைகள் முளைத்தன. இதனால் அப்பகுதியினர் கொரோனா அச்சத்தில் தவித்தனர்.தேனி புதுபஸ் ஸ்டாண்டில் பயணிகள் சேராததால் மாவட்டத்திற்குள் 2 மணிநேரத்திற்கு ஒரு பஸ் என இயக்கப்பட்டன.

பயணிகள் வருகைக்காக 10 பஸ்கள் வரை காத்திருந்தன. ஊரடங்கு அமல்படுத்துவதில் விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் தேவையின்றி வெளியில் வரும் கூட்டம் குறையும். கொரோனோ பரவலையும் தடுக்கலாம். எனவே இதில் போலீசார் கவனம் செலுத்த வேண்டும். மக்களும் வீட்டை வீட்டு வெளியே வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தர வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X