தீவிரம்! தொற்று அதிகரிப்பால் கட்டுப்பாடுகள்...அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை| Dinamalar

தமிழ்நாடு

தீவிரம்! தொற்று அதிகரிப்பால் கட்டுப்பாடுகள்...அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

Added : ஜூன் 26, 2020
Share
 தீவிரம்! தொற்று அதிகரிப்பால் கட்டுப்பாடுகள்...அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

சென்னையில் இருந்து வருபவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால், கடலுார் மாவட்டத்தில் தொற்று இல்லாத நாட்களே இல்லை என்ற நிலையில் அதிகரித்து வருகிறது. நேற்று 6 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று சிதம்பரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் இறந்ததால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தொற்று அதிகம் பாதித்த மாவட்ட பட்டியலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த இடத்தை கடலுார் மாவட்டம் பிடித்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டு, வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெளி மாநிலத்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அப்படி இருந்தும் நோய் தொற்று குறையவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய ஆலோசனை முடிவின்படி, நேற்று முதல் மண்டலங்களுக்குள் பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கப்படுகிறது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலுார் மாவட்ட எல்லைகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அந்தந்த கலெக்டர்களே முடிவெடுக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளதால், கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, அதிகாரிகளுடன் கலெக்டர் அன்புச்செல்வன் நேற்று ஆலோசனை நடத்தினார். டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன், சப் கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், தாசில்தார்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர் .

கூட்டத்தில், நோய் தொற்று குறைவாக உள்ள சில மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், கடலுார் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தலாம் என, ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வியாபார நிறுவனங்களின் நேரக்கட்டுப் பாடு, முகக்கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் அலட்சியம் காட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டுள்ளது. எனவே, விரைவில் கடலுார் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த அதிரடி அறிவிப்பு வெளியாகலாம் என, தெரிகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X