பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு சான்றிதழ் தர தடையை எதிர்த்து வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு சான்றிதழ் தர தடையை எதிர்த்து வழக்கு

Added : ஜூன் 26, 2020
Share

சென்னை; பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, சான்றிதழ் வழங்க தடை விதித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகில பாரத பிராமணர் சங்கத்தின் தலைவர், குளத்துமணி தாக்கல் செய்த மனு: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10 சதவீத இடஒதுக்கீட்டை, மத்திய அரசு வழங்கி உள்ளது. இதனால், மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில், இடஒதுக்கீட்டுப் பிரிவில் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த, 4ம் தேதி, வருவாய் நிர்வாக ஆணையர், அனைத்து கலெக்டர்களுக்கும், ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் அளிக்க வேண்டாம் என, கூறப்பட்டுள்ளது.அரசின் இந்த உத்தரவால், எங்கள் சங்க உறுப்பினர்கள், மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. எங்களில் பலர் வறுமையில் உள்ளனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில், மிகவும் கஷ்டப்படுகின்றனர்.வருவாய் நிர்வாக ஆணையரின் உத்தரவு, அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே, அந்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், மத்திய அரசு உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், 30ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X