இந்தியா

'ஆண்டிஜென்' பரிசோதனை! கொரோனா தொற்றினை கண்டறிய .... முதல்வர் நாராயணசாமி உத்தரவு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 'ஆண்டிஜென்' பரிசோதனை!  கொரோனா தொற்றினை கண்டறிய .... முதல்வர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரி : புதுச்சேரியில் 'ஆண்டிஜென்' பரிசோதனை மூலம் கொரோனா தொற்று கண்டறிய முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரியில் தினமும் 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரோனா தொற்றுக்கு, இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும், ஜிப்மரிலும் 264 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால், கொரோனா நோயாளிகள் சரியான முறையில் கவனிக்கப்படவில்லை, உணவு சம்பந்தமாகவும் புகார் வந்துள்ளது. மருத்துவத் துறை தலைமை அதிகாரியை தொடர்புகொண்டு, முறையாக சிகிச்சை அளிக்கவும், உணவு வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

பல்வேறு பகுதிகளை பிரித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் பொறுப்பு கொடுத்து, அவர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசில் பணிபுரியும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வேலையை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.கொரோனா தொற்று கண்டறிய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தற்போது புதிய மருத்துவ பரிசோதனையை ஆரம்பித்துள்ளது. ஒருவருடைய மூக்கில் இருந்து சளி மாதிரியை எடுத்து அதன் மூலமாக 'ஆண்டிசென்' என்ற முறையில் பரிசோதனை செய்தால் 25 அல்லது 30 நிமிடத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிய முடியும்.ஆனால், 'ஆர்டி-பிசிஆர்' பரிசோதனை முறையில் முடிவு தெரிய 24 மணி முதல் 36 மணி வரை ஆகிறது.

அதனால் கொரோனா தொற்று பாதித்தவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என தெரியாமல், பரிசோதனை செய்த நபர்களையும் ஒரே வார்டில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தொற்று உள்ளவர்கள், இல்லாதவர்களுக்கும் நோயை தொற்றி விடும் நிலை ஏற்படுகிறது. எனவே, 'ஆண்டிஜென்' பரிசோதனை செய்வதன் மூலம் 30 நிமிடத்தில் முடிவு தெரிந்து கொள்ள முடியும். உடனே தொற்று உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க முடியும். தொற்று இல்லாதவர்களை வீட்டிற்கு அனுப்ப முடியும். இதன் மூலமாக தினசரி ஆயிரக்கணக்கான பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் வாய்ப்பு உருவாகும்.

'ஆர்டி-பிசிஆர்' மூலமாக ஒரு பரிசோதனைக்கு ரூ.4,500 செலவாகிறது. ஆனால், 'ஆண்டிஜென்' மூலம் பரிசோதனை செய்ய ரூ.450 தான் செலவாகும். மிகக்குறைந்த செலவில் பரிசோதனை செய்ய முடியும். இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனை புதுச்சேரியில் விரைவில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.மத்திய அரசு அதிகளவில் கொரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளது. எந்த பரிசோதனையில் அரசுக்கு செலவு குறைவாக இருக்குமோ அதனை கையாள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் 10 லட்சம் பேருக்கு அதிகப்படியான கொரோனா பரிசோதனை செய்வதில் மஹாராஷ்டிரா முதலிடத்திலும், டில்லி 2ம் இடத்திலும், புதுச்சேரி 3ம் இடத்திலும் உள்ளது. அதிகப்படியானோருக்கு பரிசோதனை செய்வதன் மூலம் புதுச்சேரி 2ம் இடத்துக்கு வர வாய்ப்பு உள்ளது.புதுச்சேரியில் பல துறைகள் இணைந்து கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இது போதாது; மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். கடைகளை மதியம் 2.௦௦ மணிக்குள் மூடுவதால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

ஆனால் சில நேரங்களில் மக்கள் தேவையின்றி உலவுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். கோயில்களில் அதிகம் பேர் கூடுகின்றனர். தங்களின் உயிர், குடும்பத்தினருடைய உயிர் முக்கியம் என்று கருத வேண்டும். யார் தனிமையில் உள்ளார்களோ, தனிமனித இடைவெளியை யார் கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு கொரோனா தொற்று வராது. மக்களின் விழிப்புணர்வு முக்கியம். வெளியூரில் இருந்து யார் வந்தாலும் அது பற்றி மக்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாஸ்க் தயாரிப்பு கம்பெனி அதிகாரிகள் மீது நடவடிக்கை : முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:கூனிச்சம்பட்டு பகுதியில் 70 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு, மாஸ்க் தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்தவர்கள் மூலமாக தொற்று பரவி உள்ளது. ஆகவே, அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். மாஸ்க் தயாரிப்பு கம்பெனி அதிகாரிகளின் மெத்தனம், புதுச்சேரியில் கொரோனா அதிகளவில் பரவ காரணமாக உள்ளது.

எனவே, அந்த கம்பெனியின் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X