மீன்பிடி தடைக்கால நிவாரணம் அமைச்சர்களிடம் செயலர் விளக்கம் | Dinamalar

இந்தியா

மீன்பிடி தடைக்கால நிவாரணம் அமைச்சர்களிடம் செயலர் விளக்கம்

Added : ஜூன் 26, 2020
Share

புதுச்சேரி : விதிமுறைகளை சுட்டிகாட்டிய மீன்வளத் துறை செயலரிடம், மீனவர்கள் அனைவருக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

முதியோர் பென்ஷன் பெறும் மீனவர்கள் மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெற அனுமதிக்க முடியாது என கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். அதையடுத்து, அனைத்து மீனவர்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க கோரி, கடலோர பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து பேச கடிதம் கொடுத்தனர்.இக்கடிதம் கிடைத்ததும், கவர்னர் கிரண்பேடி, மீன்வளத் துறை செயலர் பூர்வா கார்க்கை அழைத்து, மீன்வளத் துறையின் சட்ட விதிகளை அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களிடம் விளக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில், மீன் வளத்துறை செயலர், சட்டசபையில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அனந்தராமன் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்.அப்போது, 'புதுச்சேரி மீனவர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பென்ஷன் பெறுவோர், வேறு நிவாரண உதவியை பெறக்கூடாது என விதி உள்ளது. இதன் காரணமாகவே அனைவருக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க கவர்னர் அனுமதி வழங்கவில்லை' என, மீன்வளத்துறை செயலர் பூர்வா கார்க், சுட்டிக்காட்டி, விளக்கம் அளித்தார். ஆனால், இதை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஏற்கவில்லை.

அவர்கள் கூறுகையில், மீனவர்களை தவிர்த்த பிற சமூகத்தினர் 1.5 லட்சம் பேர் முதியோர் பென்ஷன் பெறுகின்றனர். அவர்கள் அரசின் பல்வேறு சலுகைகளை பெறுகின்றனர். அப்படி இருக்கும்போது மீனவர்கள் மட்டும் தடைக்கால நிவாரணத்தோடு, முதியோர் பென்ஷன் பெற கூடாது என கூறுவதில் நியாயம் இல்லை. முதியோர் பென்ஷன் பெறும் மீனவர்கள், அந்த தொகையில்தான் வாழ்வாதாரத்தை நடத்த வேண்டும் என்று சொல்லவும் கூடாது. அனைத்து மீனவர்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர். இந்த கருத்துக்களை கவர்னரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மீன்வளத் துறை செயலர் பூர்வா கார்க் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X