தென் சென்னையின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான ஆதம்பாக்கம் ஏரி, பல்வேறு ஆக்கிரமிப்புகளால், குட்டையாக மாறி, கழிவுநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஏரியை முழுமையாக மீட்க, பொதுப்பணித்துறைக்கு, கோரிக்கை எழுந்து உள்ளது.
தென்சென்னையில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று ஆதம்பாக்கம் ஏரி. சர்வே எண், 104ல், 400 ஏக்கர் பரப்பளவுடன் இந்த ஏரி, பரந்து விரிந்து காணப்பட்டது. மவுன்ட் ரயில் நிலையம், வாணுவம்பேட்டை, நங்கநல்லுார், பழவந்தாங்கல் ஆகியவை, ஆதம்பாக்கம் ஏரியின் எல்லைகளாக, ஒரு காலத்தில் இருந்தன.
தற்போதுள்ள தில்லை கங்காநகரின் ஒரு பகுதி, ராம்நகர், ஜீவன் நகர், டி.என்.ஜி.ஓ., காலனி எல்லாம் ஏரியாக இருந்தது என, மூத்த குடிமக்கள் கூறுகின்றனர்.வழக்கமான ஆக்கிரமிப்பு, பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால், 40 ஆண்டுகளில், ஏரி கூறு போடப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன.
ஏரியை கபளீகரம்செய்து, சர்வே எண்ணை மாற்றியும், சில நகர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 10 ஆண்டு களுக்கு முன்பே, ஆதம்பாக்கம் ஏரி, 68 ஏக்கராக சுருங்கியது.சமூக ஆர்வலர்கள் எவ்வளவோ எச்சரித்தும், ஏரியை கோட்டை விட்டதன் பலனாக, சில ஆண்டுகளுக்கு முன், கிராம நிர்வாக அலுவலர் அடங்கலில், 33 ஏக்கராக ஏரி மாறிவிட்டது தெரியவந்தது.
தற்போது, ஏரி, குளமாக மாறி, அதுவும் குட்டையாகிப் போன கதையாக இன்று, 3 ஏக்கர் பரப்பளவு உள்ளதாக, ஏரி மாறிவிட்டது. இதையும் தேட வேண்டிஉள்ளது.கோவணம் போல காட்சியளிக்கும் ஏரிக்கும், கரை அமைப்பதாக கூறி, ஏரி இடத்திலேயே பாதை அமைத்து கொடுத்து, ஆக்கிரமிப்பாளர்களின் நன் மதிப்பை பொதுப்பணித்துறை பெற்று உள்ளது.
இந்த ஏரியில் இருந்து உபரி நீர் செல்ல, இரண்டு வழித்தடம் இருந்தது. ஒன்று, வீராங்கல் ஓடை. அதில் இன்று கழிவுநீர் செல்கிறது. மற்றொன்று, ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து வேளச்சேரி ஏரிக்கு செல்லும் போக்கு கால்வாய். அது இருக்கும் இடம் தெரியவில்லை.கடந்த ஆண்டு, கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது, ஆதம்பாக்கம் ஏரியை சுற்றி இருந்த பகுதி வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், நம் நாளிதழ், 'நமக்கு நாமே'என்ற திட்டத்தை அறிவித்து, சமூகஆர்வலர்களை ஊக்கப்படுத்தியது.அதன் பலனாக, ஆதம்பாக்கம் நலச்சங்க கூட்டமைப்பினர் மற்றும் நீர்நிலை ஆர்வலர்கள் இணைந்து, ஏரியில் உள்ள கழிவுகளை அகற்றினர்.அப்போது, ஏரியின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும், ஏரியில் கழிவுநீரை நேரடியாக விடுவது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களுக்கு புகார் அளித்தனர். வழக்கம் போல கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. தற்போது மழை பெய்தாலும், ஏரியில் கழிவுநீரே தேங்கும்.எனவே, மழைக்காலத்திற்கு முன், ஏரியை சுத்தப்படுத்தி, கழிவுநீர் கலப்பதை தடுத்து, மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டும்.உயர்மட்ட குழு அமைத்து, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலையை முழுமையாக மீட்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.
- நமது நிருபர்- -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE