திருமழிசையில், தற்காலிக காய்கறி சந்தை, மழை காரணமாக தொடர்ந்து செயல்பட முடியாத நிலையில் உள்ளது. இதனால், காய்கறி மொத்த விற்பனை முறை, மாற்றி அமைக்கப்பட உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, மே, 5ல் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் ஏற்படுத்தப்பட்ட காய்கறி அங்காடி, மே, 11ல் செயல்பாட்டுக்கு வந்தது.தற்காலிக அடிப்படையில், 200 கடைகள் இங்கு அமைக்கப்பட்டன. இந்நிலையில், சில நாட்களாக, மாலை, இரவு நேரங்களில் பெய்யும் மழையால், திருமழிசை மார்க்கெட் வெள்ளத்தில் மிதக்கிறது.இதனால், காய்கறிகளை சுகாதார முறையில் இருப்பு வைத்து, விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது:சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், திருமழிசையில் தொடர்ந்து காய்கறி விற்பனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன், கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்க கோரினோம். ஆனால், 'அடுத்த ஆறு மாதங்களுக்கு இதற்கு வாய்ப்பு இல்லை' என, அங்காடி நிர்வாக குழுகூறுகிறது.
மாற்று ஏற்பாடாக, வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளை, உள்ளூர் மார்க்கெட்களுக்கு நேடியாக அனுப்ப வேண்டும். தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை என, அந்தந்த பகுதிகளில் பொதுவான ஒரு இடத்தில் நிறுத்தி, உள்ளூர் வியாபாரிகளுக்கு காய்கறிகள் வழங்கலாம்.
இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும். மொத்த வியாபாரிகளுக்கு, இதற்கான அனுமதி உள்ளிட்ட வசதிகளை, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி வழங்க வேண்டும்.இதை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். விரைவில், நல்ல முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் --