சென்னை : போலி, 'இ -- பாஸ்' முறைகேட்டில் ஈடுபட்டால், நடவடிக்கை பாயும் என, சென்னை கலெக்டர் எச்சரித்துள்ளார்.
மருத்துவம், திருமணம் மற்றும் இறப்புக்கு வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு செல்ல, சென்னை மாநகராட்சி வாயிலாக, தமிழக அரசு, 'இ -- பாஸ்' வழங்கி வருகிறது.இதற்கு, சென்னை கலெக்டர் சீதாலட்சுமி உத்தரவின்படி, 30க்கும் மேற்பட்ட வருவாய் அலுவலர்கள், மாநகராட்சியில், 'பாஸ்' வழங்கும் பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.இதில், போலியாக, பாஸ் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்ட, இரண்டு வருவாய் அலுவலர்கள் உட்பட ஐந்து பேர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
வருவாய் அலுவலர்களை, சுழற்சி முறையில் பணி அமர்த்தாமல், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்ற வைத்ததே, முறைகேடு நடக்க காரணம் என, கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது கைது செய்யப்பட்டவர்கள் உட்பட, கலெக்டர் அலுவலக அலுவலர்கள் பலர், இதற்கு புரோக்கர்கள் வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, கலெக்டர் சீதாலட்சுமி கூறியதாவது:முறையான சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே, இ - -பாஸ் வழங்கப்படுகிறது. சிலர், போலியான ஆவணங்கள் வைத்து பெறுவதாகவும், அதற்கு சில அலுவலர்கள் உதவி செய்வதாக தகவல் வருகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம்.
இதுபோல், தவறான வழிகளில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது துறை ரீதியாக மட்டுமின்றி, சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இ- - பாஸ் பிரிவில் பணியாற்றும் அலுவலர்களை, சுழற்சி முறையில் பணி அமர்த்துவது குறித்து, உயர் அதிகாரிகளுடன் பரிசீலித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.