கொரோனா நிவாரண நிதி வழங்க ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரண நிதி வழங்க ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை

Added : ஜூன் 26, 2020
Share

கிருஷ்ணகிரி: ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட, தலைமை ஒருங்கிணைப்பு ஆட்டோ ஓட்டுனர் பொதுநலச்சங்கம் சார்பில், சங்கத்தலைவர் மணி தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி நகரில், 3,000க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் துவங்கிய கொரோனா தொற்றால், நான்கு மாதமாக ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்த கொரோனா நிதி உதவித்தொகையான, 2,000 ரூபாய், அமைப்புச்சாரா தொழில் மையத்தில் பதிவு பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆட்டோ ஓட்டுனர்களில் அதிகமானோர், அமைப்புச்சாரா தொழில் மையத்தில் பதிவு செய்யாததால், இந்த உதவித் தொகையை பெற முடியாத நிலை உள்ளது. அமைப்புச்சாரா தொழில் மையத்தில் பதிவு செய்தவர்களுக்கு, அரசு அறிவித்த நிவாரண தொகையும் பெரும்பாலானோருக்கு சென்று சேரவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, சரியான விளக்கம் அளிக்கவில்லை. எனவே, தற்போதுள்ள மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் என, கிருஷ்ணகிரி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா, 2,000 ரூபாய் அரசு நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X