தமிழ்நாடு

விவசாயிகளின் கனவு திட்டம் 2021ல் பயன்பாட்டுக்கு வரும்: முதல்வர் பழனிசாமி தகவல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஈரோடு: ''மூன்று மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான, அத்திக்கடவு-அவிநாசி திட்டம், 2021 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, திருவாச்சி என்ற இடத்தில், அத்திக்கடவு - அவிநாசி நீரேற்று திட்டப்பணியை, முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து, இத்திட்டம் தொடர்பான புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

பின், அங்கு கூடி இருந்த விவசாயிகளிடம், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டம், 50 ஆண்டு கால போராட்டத்துக்குப்பின், ஜெயலலிதாவால் திட்டமிடப்பட்டு, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டம், இன்று செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. 1,657 கோடி ரூபாயில், முழுமையான மாநில நிதி மூலம் பணிகள் நடக்கிறது. 24,500 ஏக்கர் பயன்பெறும். பொதுப்பணித்துறை ஏரி 32, பஞ்சாயத்து ஏரி 42 மற்றும் 920 குட்டைகளில் நீர் நிரப்பி, நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். மூன்று மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டம், 2021 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும். இத்திட்டப்பணியுடன், ஆறு நீரேற்று மின் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, ஐந்து பணிகள் நடந்து வருகிறது. ஒரு பணி விரைவில் துவங்கும். தமிழகம் முழுவதிலும் மூன்றாண்டில், 1,000 கோடி ரூபாயில் தடுப்பணை கட்ட நிதி வழங்கி பணிகள் நடக்கின்றன. பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில், ஜம்பை உட்பட ஐந்து இடங்களில் தடுப்பணை கட்டப்படும். ஜம்பையில் பணி துவங்கி உள்ளது. மழைக்காலங்களில் நீர் தேக்கப்பட்டு, நீர் செரிவூட்டப்படும்.

குடிமராமத்து திட்டத்துக்கு, 1,433 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 6,000க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை ஏரி, விவசாய சங்கம், பாசன சபை மூலம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் உபதொழிலான கால்நடை வளர்ப்பு சிறக்க, தலைவாசலில், 1,000 கோடி ரூபாயில், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படுகிறது. பத்து லிட்டர் தரும் கால்நடையை, 25 லிட்டர் தரும் வகையில் ஆராய்ச்சி மூலம் மேம்படுத்தி கலப்பின மாடுகள் உருவாக்கி தரப்படும். விவசாயிகளுக்கு, 11,000 கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், காய்கறி, பழங்கள் விற்க, பத்து மாவட்டங்களில் தலா, 20 கோடி ரூபாய் மதிப்பில் வளாகம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், டிராக்டர்கள் வாங்கி, குறைந்த வாடகையில் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை ஒழிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்தாண்டு மக்காசோளத்தை தாக்கிய அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த, 186 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, இழப்பீடும் வழங்கப்பட்டது. இந்தாண்டும், படைப்புழுவை கட்டுப்படுத்த அரசு செயலர் மூலம் ஆய்வு செய்து, 49 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பூச்சி மருந்து தெளித்து, 95 சதவீத விளைச்சலை உறுதி செய்துள்ளோம். சில காரணத்தால் வாழை மரங்கள் பாதித்ததும், இழப்பீடு வழங்கி வருகிறோம். டெல்டா மாவட்டத்தில் புகையான் தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளோம்.

டெல்டா மாவட்டங்களில், அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களில், 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு, இடுபொருட்கள் வழங்கப்பட்டதால், 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளோம். இன்னும், மூன்று லட்சம் டன் கொள்முதல் செய்ய உள்ளதால், அதற்கும் தயாராக உள்ளோம். எனவே, இந்தாண்டு, 27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைக்க உள்ளோம். எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு டெல்டா மாவட்டத்தில் கடைமடை வரை, தற்போது நீர் சென்றுள்ளதை, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். உரிய காலத்தில் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதால், பாதுகாப்பான விவசாயம் செய்யும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அத்துடன், டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, விவசாயம் காக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X