சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

வேறு வேலையை பார்க்கலாம்!

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement


வேறு வேலையை பார்க்கலாம்!முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொத்துக் கொத்தாக, மக்கள், 'கொரோனா'விற்கு பலியாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எல்லாருடைய சிந்தனையும், 'இந்தக் கொடிய அரக்கனிடம் இருந்து, எப்படி தப்பிக்கப் போகிறோம்' என்பதே தவிர, வேறில்லை.எப்போது நோய் தாக்குமோ என்ற அச்சம்; அன்றாடத் தேவைக்குக் கூட, அல்லல் படும் அவலம்; வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் ஏற்படும் மன அழுத்தம் என, பல இன்னல்களில், மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள மர்மத்தைப் பற்றி நினைக்கும் நிலையில், மக்கள் இல்லை.இந்த நேரத்தில், ஜெ., மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி, ஏழு முறை கால நீட்டிப்பு வாங்கியும், மேலும் கால அவகாசம் கேட்டிருக்கிறார். இப்போது, இதுவா மிகவும் அவசியம்? ஒருவர் எப்படிச் செத்தார் என்பதைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும், இருப்போரை எப்படி காப்பாற்றுவது என, யோசிப்பது தான், இன்று, அரசின் தலையாயக் கடமை.தும்பைவிட்டு வாலைப் பிடிக்காமலும், அவசியமில்லாத வேலைகளில் ஈடுபடாமலும், கவனத்தைச் சிதற விடாமலும், அனைவருக்குமான பொது எதிரியான, கொரோனாவை ஒழிக்க முயல்வதே, அரசின் அறிவுடமையான செயல்.சமீபத்தில், ஊர்களின் ஆங்கிலப் பெயர்களை, தமிழ்ப்படுத்தி, அரசாணை வெளியிட்டதும்; விமர்சனம் எழுந்ததும், அத்திட்டம் வாபஸ் பெறப்பட்டதும், கேலிக்குரியதானது. இதெல்லாம், இப்போது தேவையா என்ற கேள்வியை, மக்களிடம் எழுப்பியது.அதேபோல, தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாய் இருக்கும் போது, ஜெ.,யின் இறப்பு பற்றிய மர்மத்தை, யார் நினைக்கப் போகின்றனர்? கட்சிக்காரர்களுக்கும், அவரது பெயரைச் சொல்லி, பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிலருக்கும், வேண்டுமானால் அது அவசியமாய் இருக்கலாம்.
கடந்த, 2017ல் ஆரம்பித்து, இன்று வரை நீண்டுக் கொண்டே இருக்கும், ஆறுமுகசாமி கமிஷனால், அரசு கஜானா தான் காலியாகிறதே தவிர, உருப்படியாய் ஒன்றும் நடந்த மாதிரி தெரியவில்லை.யாரையோ திருப்திப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, இந்த கமிஷனுடைய செயல்பாடுகளில், கட்சிக்காரர்கள் உட்பட, யாருக்கும் ஆர்வம் இருக்கிற மாதிரியும் தெரியவில்லை.
நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்யாமல், வேறு ஏதாவது அவசியமான, அவசரமான செயலில், அரசு ஈடுபட வேண்டும். ஒரு வேளை, இந்த கமிஷன், ஜெ.,யின் மரண மர்மத்தைக் கண்டுபிடித்து, இன்னார் தான் குற்றவாளி எனச் சொல்லும் போது, குற்றவாளியே கூட மரணித்திருக்கலாம்.
ஜெ., மர்மம் குறித்த விசாரணை என்பது, 'டிவி மெகா சீரியல்' போன்றது. அதற்கு, இப்போது முடிவே இல்லை. ஆகையால், உருப்படியான வேலையில், அரசு ஈடுபட வேண்டும்.


சம்பளம்எப்போதுகிடைக்கும்?ரா.முரளிதரன், பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தனியார் கல்வி நிறுவனங்களின் நிலை குறித்தும், அங்கு பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் ஊதியம் பற்றியும், செய்தி வெளியிடும், நம் நாளிதழுக்கு நன்றி.
மாத ஊதியம் தவிர வேறு வருவாய் இன்றி, வாழ்ந்து வந்த, தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களும், ஊழியர்களும் தற்போது, குடும்பம் நடத்தவே சிரமப்படுகின்றனர். மாணவர்களிடம் கல்வி கட்டணம் பெறுவது பற்றி, அரசு ஆலோசித்து வரும் நிலையில், கோவையில் இயங்கி வரும், தனியார் பல்கலை, 2019 - 20-20ம் கல்வி ஆண்டிற்கான முழு கட்டணத்தையும், மாணவர்களிடம் வசூலித்துள்ளது.ஆனால், அங்கு பணி புரியும், நிரந்தர ஊழியர்களுக்கு, 30 சதவீதம் கூட, ஊதியம் தரவில்லை. நிரந்தரமில்லா ஊழியர்களுக்கு, இரண்டு மாதங்களாக, ஊதியமே தரவில்லை.அவர்களின் அன்றாட வாழ்க்கை, கேள்விகுறியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள, தனியார் கல்வி நிறுவனங்கள், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, ஆலோசிக்கும் அரசு, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதை, உறுதி செய்ய வேண்டும்.


நம்மை காப்பாற்றும் நம்பிக்கைஆதித்யா கல்யாணராமன், வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகையே அச்சுறுத்தி வரும், 'கொரோனா' வைரஸ் காரணமாக, நம் நாட்டில், 70 நாட்களுக்கும் மேலாக, நாம் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். இதனால் நம் மனதில், பல குழப்பங்களும், கவலைகளும் குடியேறிவிட்டன.'வேலையின்றி, இத்தனை நாட்கள் இருக்கிறோமே... வீட்டில், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுமே... என்ன செய்வது?' என்ற, மன அழுத்தம் நிச்சயம் தோன்றியிருக்கும். மேலும், ஆயிரக்கணக்கில் பெருகிவரும், கொரோனா பாதிப்பால், நமக்கும் நோய் தொற்று வந்துவிடுமோ என்ற பீதி, மனதில் எப்போதும் குடிகொண்டுள்ளது. லேசான தலைவலி, இருமல் வந்தால் போதும், மனம், 'திக், திக்' என, அடித்துக்கொள்கிறது.இந்த காலத்தில், அயராது பணி செய்துக் கொண்டிருக்கும் மருத்துவர், செவிலியர், காவலர்கள், துாய்மை பணியாளர்களின் அரும்பணியை பாராட்டத் தோன்றுகிறது. கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கையில், நம் எல்லையில், அத்துமீறும் சீனா மீது, கோபம் வருகிறது. எல்லையை பாதுகாக்க, தங்கள் இன்னுயிரை நீத்த, நம் ராணுவ வீரர்களுக்கு, கண்ணீர் அஞ்சலி செலுத்தினோம்.ஊரடங்கு நீடிக்குமா, வேலை மீண்டும் கிடைக்குமா, கொரோனா கட்டுப்படுத்தப்படுமா, பள்ளி எப்போது திறக்கும் என, எண்ணற்ற கேள்விகள், நம் மனதை குழப்பிக் கொண்டிருக்கின்றன.இப்படி, பல எதிர்மறையான எண்ணங்களை, இந்த ஊரடங்கு, நமக்குள் விதைத்திருக்கலாம். நாம், கவனமாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், கொரோனாவை விரட்டுவோம். இயல்பு நிலைக்கு, விரைவில் திரும்புவோம்.'நம்பினோர் கெடுவதில்லை' என்பது, நான்கு மறை தீர்ப்பு. நம்பிக்கை, நம்மை காப்பாற்றும்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
27-ஜூன்-202011:32:25 IST Report Abuse
Sathyanarayanan Subramanian ஆறுமுக சாமி கமிஷன் வெறும் கண்துடைப்பு நாடகம். அரசு கஜானா காலியாகிறதே தவிர உருப்படி ஆக ஒன்று மில்லை. அந்த பணத்தை ஏழை மக்களின் பசியைப் போக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள் இந்த கொரோனா வைரஸ் காலத்தில். பசி அறிந்து போடுவது வயிறு வாழ்த்தும். நன்றி.
Rate this:
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
27-ஜூன்-202007:15:22 IST Report Abuse
venkat Iyer திரு.பட்டாபிராமன் குறிப்பிட்டது போல அரசு கொராணாவிற்கு மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறினால்,வருவாய்த்துறை செயல்படாமல் போனால் அரசிற்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்காமல் போய்விடும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-ஜூன்-202006:33:16 IST Report Abuse
D.Ambujavalli ஒரு துரும்பையும் அசைக்காமல் ஆறுமுகசாமி கமிஷன் தண்ட சம்பளம் வாங்குகிறது. வழக்குப் போட்டவரோ ஒரு அழைப்புக்கு போகாது சம்மனை அலட்சியப்படுத்தினார். அவருக்கு வேண்டியது கிடைத்துவிட்டது. ஜெயா கல்லறையில் படுக்க ஆசைப்பட்டு தற்கொலை செய்துகொண்டார், என்று கூட முடித்துவிடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X