பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூன் 26, 2020
Share
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'இதெல்லாம், அரசுப் பணி; அரசியல் பணியல்ல. நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம்...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, உயிரிழந்த திருப்பூர் ஆம்புலன்ஸ் ஊழியர் கணேசனுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.


'கொரோனா பூதம் வேட்டையாடிக் கொண்டிருக்கையில், அந்த கொடிய நாளை நினைவுபடுத்த, எதிர்க்கட்சிகள் மறந்து விட்டதை, நீங்கள் செய்து விட்டீர்களே...' என, பாராட்டத் துாண்டும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
நாட்டில் அவசர நிலையை பிறப்பித்து, கருத்து சுதந்திரத்தை, மனித உரிமைகளை பறித்து, இந்தியாவை காங்கிரஸ் கட்சி உருக்குலைத்த நாள், ஜூன் 25. இந்திய வரலாற்றின் கருப்பு தினம் அது!


'உண்மை தான். தமிழக அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் தான், தமிழக மக்கள் உள்ளனர்; அந்த நம்பிக்கையை காக்க வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்:
நோய் தொற்று எண்ணிக்கையை கண்டு, மக்கள் அச்சப்படத் தேவையில்லை. எத்தனை பேரை காப்பாற்றியிருக்கிறோம் என கவனிக்க வேண்டும். சிகிச்சையில் இருப்போர் குணமடைந்து வீடு திரும்புவது நம்பிக்கை தருகிறது. கொரோனா உலக பொது சுகாதார அவசர பிரகடனம், நடைமுறையில் உள்ளது. அதை மக்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்.


'இதெல்லாம், நீங்கள் கூட செய்யலாமே... கொரோனாவிடம் இருந்து சமூகத்தை காக்கும் பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது...' என, நினைவுபடுத்தத் துாண்டும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை:
கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் போது பங்கேற்கும் உறவினர்கள், அணியும் கவச உடை, சரியாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. அதற்கான விழிப்புணர்வை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.


'ஒரு திட்டத்தின் நன்மை, தீமைகளை அறியாமல், அதிரடியாக எதிர்ப்பதே, தமிழக அரசியல் தலைவர்களின் வாடிக்கையாக போய் விட்டது...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
ஒன்றிரண்டு மாநிலங்களில், தவறு நடந்தது என்பதற்காக, நாடு முழுதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும், மத்திய அரசின் நடவடிக்கை சரியானதல்ல. இது, கூட்டுறவு அமைப்பின் நோக்கத்தையே சிதைத்து விடும். இந்த முடிவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X