டீசல் விலை உயர்வால் செலவு அதிகரிப்பு எலக்ட்ரிக் காருக்கு மாறுது மின் வாரியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டீசல் விலை உயர்வால் செலவு அதிகரிப்பு 'எலக்ட்ரிக்' காருக்கு மாறுது மின் வாரியம்

Added : ஜூன் 26, 2020
Share

சென்னை; டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாடகை கார்களின் செலவை குறைக்க, அதிகாரிகளுக்கு, பேட்டரியில் இயங்கும், 'எலக்ட்ரிக்' கார்களை வழங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

வலியுறுத்தல்

தமிழக மின் வாரியத்தில், இயக்குனர்கள், தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் உள்ளிட்ட பதவிகளில், பலர் பணிபுரிகின்றனர். அதில், இயக்குனர்கள் அலுவலகம் வந்து செல்ல, 'இன்னோவா' கார்கள் வழங்கப்பட்டுள்ளன.தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் உள்ளிட்ட முதல் நிலை அதிகாரிகளுக்கு, வாடகை கார் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. எனவே, சுற்றுச்சூழலை பாதிக்காத, எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துமாறு, அனைத்து மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்களையும், மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. தற்போது, டீசல் விலை உயர்வால், வாடகை கார்களின் செலவு அதிகரிப்பதால், எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

'எலக்ட்ரிக்' கார்இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:லிட்டர் டீசலில், அதிக பட்சம், 10 கி.மீ., செல்லலாம். லிட்டர் டீசல் விலை, 77 ரூபாயாக உள்ளது. இதனால், 1 கி.மீ.,க்கு, 7 ரூபாய் செலவாகிறது. அதேசமயம், எலக்ட்ரிக் காரில், 1 கி.மீ.,க்கு, 1 ரூபாய் மட்டுமே செலவாகும்.மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனம், அரசு துறைகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில், டிரைவருடன் எலக்ட்ரிக் கார்களை வாடகைக்கு விடுகிறது. அந்த நிறுவன கார்களை வாடகைக்கு பெற முயற்சி நடந்தது.

ஆனால், விலை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட இழுபறியால், அவற்றை வாங்க முடியவில்லை. டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, வாடகை கார்களின் செலவும் அதிகரிக்கிறது.எனவே, எனர்ஜி எபிஷியன்சியிடம், எலக்ட்ரிகள் கார்கள் பயன்படுத்துவது தொடர்பாக, மீண்டும் பேச்சு நடக்கிறது. விலை இறுதி செய்யப்பட்டு, விரைவில் எலக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X