பொது செய்தி

இந்தியா

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயிப்பது எப்படி?

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சி.பி.எஸ்.இ., மாணவர்கள், மதிப்பெண் நிர்ணயிப்பது எப்படி?

புதுடில்லி : பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட, சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயிப்பதற்கான நடைமுறையை, தேர்வு வாரியம், அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது; இதை ஏற்பதாக உச்ச நீதிமன்றமும் அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தில் படிக்கும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச்சில் நடந்தது.


இரண்டு வாய்ப்பு



ஒரு சில மாநிலங்களில், 10ம் வகுப்பு மாணவர்கள், குறிப்பிட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதிய நிலையில், டில்லி போன்ற மாநிலங்களில் கலவரம் காரணமாக இரண்டு தேர்வுகளை மட்டுமே எழுதினர்.இதற்கிடையே, கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மார்ச் இறுதியிலிருந்து நாடு முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டன.இதனால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள், பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களையும் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

மீதமுள்ள தேர்வுகளை, அடுத்த மாதம், 1 - 15க்குள் நடத்த, சி.பி.எஸ்.இ., திட்டமிட்டது; இதை எதிர்த்து, மாணவர்களின் பெற்றோர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
'கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுத் தேர்வுகளை நடத்துவது ஆபத்தை ஏற்படுத்தும்' என, அந்த மனுவில் கூறப்பட்டது.

இந்த மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, 'கொரோனா பாதிப்பு காரணமாக, சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுவதாவும் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கொரோனா பாதிப்பு குறைந்து, நிலைமை மேம்படும்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு நடத்தப்படும்.


முந்தைய தேர்வு



விருப்பம் உள்ள மாணவர்கள், இந்த தேர்வை எழுதலாம். விருப்பம் இல்லாத மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு, தேர்ச்சி குறித்து முடிவு செய்யப்படும் என, மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ., தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயித்து, தேர்ச்சியை கணக்கிடுவது என்பதற்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* அனைத்து தேர்வுகளையும் எழுதி முடித்த மாணவர்களுக்கு, அவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், 'ரிசல்ட்' அறிவிக்கப்படும்



* மூன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு, அவற்றில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பாடங்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு எழுதாத பாடங்களுக்கும் மதிப்பெண் நிர்ணயிக்கப்படும்.
*மூன்று பாடங்களுக்கு மட்டும் தேர்வு எழுதியவர்களுக்கு, அவற்றில் அதிகமாக மதிப்பெண் பெற்ற இரண்டு பாடங்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் மற்ற பாடங்களுக்கு மதிப்பெண் வரையறை செய்யப்படும்



*டில்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கலவரம் காரணமாக, ஒன்று அல்லது இரண்டு பாடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்த மாணவர்களுக்கு, அவர்கள் எழுதிய, 'இன்டர்னல்' எனப்படும் அக மதிப்பீடு மற்றும் 'பிராக்டிகல்' எனப்படும், செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயிக்கப்படும்

*கொரோனா நிலை சீரடைந்து, நிலைமை மேம்பட்டதும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், மீதமுள்ள பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். விருப்பம் இல்லாத மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படும்

*தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, அந்த தேர்வுகளில், அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், இறுதி மதிப்பெண் கணக்கிடப்படும்.

* பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், ஜூலை மத்தியில் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த நீதிபதிகள், இதற்கான முறையான அறிவிப்பை வெளி
யிடும்படி, சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிட்டனர். ஐ.சி.எஸ்.இ., எனப்படும், இந்திய சான்றிதழ் கல்வி வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான மதிப்பெண் வரையறை, மாறுபட்டதாக இருக்கும் என்றும், அதற்கான விரிவான அறிக்கை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.


ஜூலை, 15ல், 'ரிசல்ட்'



பொதுத் தேர்வு குறித்து, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள், ஜூலை, 15ல் வெளியிடப்படும். மதிப்பெண் நிர்ணயம் குறித்த விரிவான அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், மீண்டும் தேர்வு நடத்தப்படும். விருப்பமில்லாத மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. அதேநேரத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எதுவும் நடத்தப்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
27-ஜூன்-202008:19:46 IST Report Abuse
blocked user இந்த முறையில் மதிப்பெண் கொடுத்தால் சராசரி உட்பட பலருக்கு லாபம். நன்றாக படித்தவர்களுக்கு லாபமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X