கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (9)
Share
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை:

சென்னையில், கொரோனா தொற்று தடுப்பு பணிகளில், அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், நோய் பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும், மாநகராட்சி தரப்பில், போதிய ஒத்துழைப்பு இல்லை என்றும், தன்னிச்சையான செயல்பாடுகளால், நோயின் பிடியில் சிக்கி சென்னை தவிக்கிறது என்றும், மண்டல பணி குழுவினர் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னையில் ஆரம்ப கட்டத்தில், கொரோனா பாதிப்பின் தீவிரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய, ஐந்து மண்டலங்களில் அதிகமாக இருந்தது. இதற்கு, மக்கள் அடர்த்தி, முக்கிய காரணமாக கூறப்பட்டது. இந்த மண்டலங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும், நோய் பாதிப்பு உள்ளது. நோய் பரவல், மற்ற மண்டலங்களுக்கு செல்லாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மக்களுக்கு மாநகராட்சி உறுதி அளித்தது.அதற்கு மாறாக, நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னை மாநகராட்சியின், அனைத்து மண்டலங்களிலும், கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.தமிழகத்தில், ஆறு மாவட்டங்களில் மட்டுமே, ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில், மண்டல வாரியாக, பாதிப்பு ஆயிரத்தை கடந்து, நாலாயிரம், ஐந்தாயிரம் என, எகிறுகிறது. சென்னையில் உள்ள, 15 மண்டலங்களில், ஐந்து மண்டலங்களில், நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில், 6,951; தண்டையார்பே்டடையில், 5,717; அண்ணா நகரில், 5,260; தேனாம் பேட்டையில், 5,516; கோடம்பாக்கத்தில், 5,216 பேர், கொரோனா நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். மற்ற மண்டலங்களிலும், அதிக அளவு தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. பெருங்குடி, சோழிங்கநல்லுார், மணலி மண்டலங்கள், ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளன. மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தொற்று அதிகரித்து வருவதையே, இது காட்டுகிறது.இதற்கு, மாநகராட்சியின் ஒத்துழையாமையே காரணம் என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறையாக திட்டமிடல் இல்லாமல், தன்னிச்சையான செயல்பாடுகள் தான், நோய் பரவலுக்கு காரணம் என்ற, புகார் வாசிக்கப்படுகிறது.

நோய் தடுப்பு பணியில், சுகாதாரத் துறையும், மாநகராட்சியும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரு துறைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருந்தால் தான், தொற்று தடுப்பில் வெற்றி பெற முடியும். ஆனால், மூன்று மாதமாகவே, சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படாமல், மாநகராட்சி தனி ரூட்டில் செல்கிறது.

இப்படி செயல்படுவது ஏன், எதற்கு என்பதும் புதிராக இருக்கிறது. மூத்த அதிகாரிகள் சொல்வதை கேட்டு, முறையாக செயல்பட்டிருந்தால், சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள், இந்நேரம் பாராட்டப்பட்டு இருக்கும். நோய் பரவலை தடுக்க, மண்டல வாரியாக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கும், மாநகராட்சிக்கும் இடையே அறவே ஒருங்கிணைப்பு இல்லை.

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், மற்ற அலுவலர்களுடன் இணைந்து செயல்படாமல், தன் உத்தரவை மட்டும் செயல்படுத்தும்படி கூறுவதாக, அவர்கள் சொல்கின்றனர்.
தொற்று உறுதியானவர் வீட்டில் உள்ள நபர்கள், தனிமைப்படுத்தப்பட வேண்டும் என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், சென்னையில் பல இடங்களில், தொற்று பாதித்தவர் வீட்டினர், தனிமைப் படுத்தப்படாமல் உள்ளனர். இதை, மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. இது, நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

தற்போது, தன்னார்வ களப் பணியாளர்கள் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் தான், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சியில், உயர் பதவியில் உள்ள அதிகாரிகள், வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்களை முடுக்கி விட வேண்டிய, கமிஷனரும் மவுனம் சாதிக்கிறார்.

மேலும், கொரோனா தடுப்பில், தமிழக சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை, மாநகராட்சி பொருட்படுத்துவதில்லை. கொரோனா தடுப்பு பணிகள் எனக்கூறி, பல கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது; அதுவும் தரமற்றதாக உள்ளது.அமைச்சர்கள் வசிக்கும் பகுதிகளில் தெளிக்கப்படும், கிருமி நாசினி மருந்து, வீரியமிக்கதாக இருக்கிறது. பல மணி நேரம் தாக்கு பிடிக்கிறது. மற்ற பகுதிகளில் தெளிக்கப்படும் கிருமி நாசினியில், அதன் வாடை கூட வருவதில்லை. அந்தளவுக்கு தரமற்றதாக உள்ளது.

மருத்துவமனைகள் தவிர்த்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை தங்க வைக்க, பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு தங்க வைக்கப்படுவோருக்கு, தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிக்கு, அரசு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கியுள்ளது. அது முறையாக செலவழிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து, சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:சென்னையில் தற்போதைய சூழலில், கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், தொற்று பரவல் அதிகரிக்காமல் தடுக்கலாம். அதற்கு, சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒருங்கிணைந்து, முழு வீச்சில் பணியாற்ற வேண்டும்.பொது மக்களும், கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், தேவையில்லாமல், வெளியே வருவதை தவிர்த்தல் போன்றவற்றை, கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்?மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் செயல்பாடுகள் சரியில்லை என, அரசு நியமித்த, மண்டல குழு அதிகாரிகள், தலைமைச் செயலரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதனால், மாநகராட்சி கமிஷனர் மாற்றப்படலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது. புதிய கமிஷனரை நியமிக்கும்போது, அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில், கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்துள்ள அதிகாரியை, நியமிக்க வேண்டும் என்றும், அரசுக்கு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி, தற்போது, வீட்டுவசதித் துறை செயலராக உள்ள, ராஜேஷ் லக்கானி, புதிய கமிஷனராக நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, அவர் சென்னை மாநகராட்சி கமிஷனராக, சிறப்பாக பணியாற்றியவர். - நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X