ஒருமைப்பாட்டை காப்போம் ஐ.டி.பி.பி., தலைவர் சூளுரை| Dinamalar

ஒருமைப்பாட்டை காப்போம் ஐ.டி.பி.பி., தலைவர் சூளுரை

Added : ஜூன் 27, 2020
Share

புதுடில்லி; ''எல்லையில் எத்தகைய சூழலையும் எதிர்கொண்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காப்போம்,'' என, இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையான, ஐ.டி.பி.பி., தலைவர், எஸ்.எஸ்.தேஸ்வல் தெரிவித்துள்ளார்.

டில்லியில், சத்தர்புர் பகுதியில், ஐ.டி.பி.பி., அமைத்துள்ள பிரமாண்ட கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது:நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றுடன், எல்லைகளை பாதுகாக்கும் பணியில் ராணுவத்தினரும், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினரும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

அவர்கள், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் திறனுடன் விளங்குகின்றனர்.கடந்த நான்கு மாதங்களில், ஐ.டி.பி.பி., கொரோனா சிகிச்சைக்கான தனிமைப்படுத்தும் மையங்களை அமைப்பதில், நல்ல அனுபவம் பெற்றுள்ளது. முதலில், சாவ்லா நகரிலும், அடுத்து நொய்டாவிலும், 200 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைத்தோம்.தற்போது, 10 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட, பிரமாண்ட சிகிச்சை மையத்தை அமைத்துள்ளோம்.

இங்கு முதற்கட்டமாக, 1,000 டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பணிபுரிவர். இதைத் தொடர்ந்து மேலும், 1,000 பேர் பணியமர்த்தப்படுவர். கொரோனா நோயாளிகளை அழைத்து வர, 75 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும். இந்த மையத்தின் நிர்வாக பொறுப்பை, ஐ.டி.பி.பி., ஏற்றுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X