திம்பு,: 'அசாம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதை பூடான் நிறுத்திவிட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை' என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அண்டை நாடான பூடான் எல்லையிலிருந்து அசாமுக்கு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரை வைத்து தான் அசாமின் பக்கா உதல்குடி மாவட்டங்களில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவதை பூடான் அரசு நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் அசாமில் விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் பூடான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவுக்கும் பூடானுக்கும் உள்ள நட்புறவை சீர்குலைக்க சில தீய சக்திகள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. இதன் ஒரு முயற்சியாகத்தான் அசாமிற்கு தண்ணீர் திறந்து விடுவதை பூடான் நிறுத்தி விட்டதாக பொய் தகவல் வெளியானது.
அசாமிற்கு கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதை பூடான் எதற்காக நிறுத்த வேண்டும்; அதுவும் கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இது போன்ற செயலில் பூடான் ஒரு போதும் ஈடுபடாது.அசாம் மக்களுடன் பூடான் மக்களுக்கு கலாசார ரீதியாக வரலாற்று ரீதியாக உறவு உள்ளது. இதை யாராலும் பிரிக்க முடியாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE