தீவிரம்! செஞ்சி பகுதியில் விவசாய பணிகள்...தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீவிரம்! செஞ்சி பகுதியில் விவசாய பணிகள்...தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூன் 27, 2020
Share

செஞ்சி : இரண்டாவது ஆண்டாக தென்மேற்கு பருவ மழையின் போது செஞ்சி பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. செஞ்சி பகுதியில் வெளி மாவட்டங்களை போன்று ஆற்று பாசனம் கிடையாது. செஞ்சி பகுதி விவசாயிகள் பெய்யும் பருவ மழையால் ஏரி, குளங்கள் நிரம்புவதை கொண்டே விவசாயம் செய்து வருகின்றனர். 2016ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செஞ்சி பகுதியில் பருவ மழை பொய்த்து போனது. இதனால் கிணறுகளிலும் ஏரிகளிலும் தண்ணீர் வற்றி விவசாயம் செய்ய முடியாமல் போனது.

மேலும் கால்நடைகளுக்கு தண்ணீரும், தீவனமும் கிடைக்காமல் டேங்கர்களில் தண்ணீர் கொண்டு வந்து கால்நடைகளை வளர்த்தனர்.பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை விற்று ஜீவனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கு விமோசனம் கிடைக்கும் விதமாக கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையின் போது நல்ல மழை பெய்தது. பெரும்பாலான ஏரிகளில் 50 சதவீதம் தண்ணீர் தேங்கியது. அடுத்து வந்த வடகிழக்கு பருவ மழையின் போது அனைத்து ஏரிகளும் நிரம்பின. இதனால் கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் துவங்கி விவசாயம் சிறப்பாக நடந்து வருகிறது. '
கடந்த ஆண்டு கோடையின் போது வறண்டு கிடந்த ஏரி, குளங்களில் கோடைக்குப் பின் 30 முதல் 40 சதவீதம் தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை துவங்கி ஒரு மாதத்தில் செஞ்சி பகுதியில் கடந்த ஆண்டை போலவே தொடர் மழைபெய்து வருகிறது. இம்மாதம் 12ம் தேதி 8 மீ.மீ., 17ம் தேதி 10 மீ.மீ., 19ம் தேதி 30 மீ.மீ., 21ம் தேதி 12 மீ.மீ., 23ம் தேதி 13மீ.மீ.,24ம் தேதி 33 மீ.மீ., 25ம் தேதி 67 மீ.மீ., என இந்த மாதம் மட்டும் 179 மீ.மீ., மழை பதிவானது.

இதன் காரணமாக செஞ்சி பகுதியில் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வர துவங்கி உள்ளது. அடுத்து வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இந்த ஆண்டும் ஏரிகள் நிரம்பும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் அடுத்த சாகுபடிக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நெல் சாகுபடியுடன், பருவ மழையை நம்பி புஞ்சை நிலங்களில் ஜூன், ஜூலை மாதத்தில் சாகுபடி செய்யப்படும் மானாவாரி வேர்கடை விதைப்பதற்கும் விவசாயிகள் நிலங்களில் புழுதி ஓட்டி தயார் நிலையில் வைத்துள்ளனர். விவசாயம் சார்ந்தே செஞ்சி பகுதியில் அனைத்து வர்த்தகமும் நடப்பதால், வரும் மாதங்களில் செஞ்சி பகுதியில் மற்ற வர்த்தகமும் சிறப்பாக நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X