முகக்கவசத்தை மறந்த வியாபாரிகள்; தெரு சந்தைகளில் தொற்று அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசத்தை மறந்த வியாபாரிகள்; தெரு சந்தைகளில் தொற்று அபாயம்

Added : ஜூன் 27, 2020
Share

கரூர்: கரூர் நகராட்சி பகுதிகளில் கூடும் தெரு சந்தைகளில் வியாபாரிகள் முகக்கவசம் அணிவதை மறந்தே விட்டனர். பொது மக்களும் அதிகளவில் சந்தைகளில் கூடுவதால், தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க வரும், 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உழவர் சந்தை, வாரச்சந்தைகளை திறக்க, அறிவிப்பு வெளியாகாத நிலையில், ஆங்காங்கே சந்தைகள் கூடுகின்றன. அதில், வியாபாரிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கரூர் நகராட்சி பகுதிகளில் வாரச்சந்தை, தினச்சந்தை ஆகியவை கடந்த, இரண்டு வாரங்களாக வழக்கம் போல் கூடுகிறது. நேற்று, திருச்சி சாலை காந்தி கிராமத்தில், டபுள் டேங்க் பகுதியில் சந்தை கூடியது. அதில், கடை வைத்திருந்த வியாபாரிகள் பெரும்பாலும் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். அதேபோல், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், காய்கறிகளை வாங்கிச் சென்றனர். ஏற்கனவே, காந்தி கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்று சிலருக்கு ஏற்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர். தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து, மருத்துவ கல்லூரி மருத்துவமனையும், காந்தி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, ஜவஹர் பஜார் சாலை, சின்ன குளத்துப்பாளைம், வெங்கமேடு எம்.ஜி.ஆர்., சிலை, காந்தி கிராமம், பசுபதிபாளையம் பகுதியில் கூடும் தினச்சந்தை, வாரச்சந்தைகளில் வியாபாரிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணியும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X