இது தான், பத்திரிகையாளர் குசும்பு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இது தான், பத்திரிகையாளர் குசும்பு!'

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
 'இது தான், பத்திரிகையாளர் குசும்பு!'


இது தான், பத்திரிகையாளர் குசும்பு!'




ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, திருவாச்சி என்ற இடத்தில், அத்திக்கடவு - அவிநாசி நீரேற்று திட்டப்பணியை, முதல்வர் இ.பி.எஸ்., ஆய்வு செய்தார்.பின், அங்கு கூடி இருந்த விவசாயிகளிடம், முதல்வர் இ.பி.எஸ்., பேசுகையில், 'எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு, டெல்டா மாவட்டத்தில் கடைமடை வரை, தற்போது நீர் சென்றுள்ளதை, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்' என்றார்.
இதை குறிப்பெடுத்த நிருபர், 'உண்மை தான். ஜெ., ஆட்சியில் கூட, கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை...' என்றார்.அருகிலிருந்தவர், 'இது தான், பத்திரிகையாளர் குசும்பு' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.


'படம் காட்டுறாரா முதல்வர்?'



'கொரோனா' பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது. அதில், முதல்வர் இ.பி.எஸ்., பங்கேற்றார். பின், காந்திபுரம் நகர பேருந்து நிலையத்துக்குச் சென்றார். அங்கிருந்த பயணியரிடம் குறைகளை கேட்டறிந்தார். பஸ் ஒன்றில் ஏறியவர், 'முக கவசம் அணியணும்; சமூக இடைவெளி வேணும்' என, பயணியருக்கு அறிவுரை வழங்கினார்.பஸ்சில் இருந்து இறங்கியவர், எதிரில் இருந்த பெட்டிக் கடைக்குச் சென்று, அங்கிருந்த முக கவசங்களை குறித்து விசாரித்தார். முதல்வர், இப்படி அடுத்தடுத்த இடங்களுக்கு செல்ல, அதிகாரிகளும், போலீசாரும் அவரை பின்தொடர முடியாமல் திணறினர். அதிகாரி ஒருவர், 'என்னய்யா இது, முதல்வன் படம் மாதிரி இருக்கு...' என்றார். அருகிலிருந்தவர், 'முதல்வர், படம் காட்டுறாருன்னு சொல்லுறீங்களா...' என்றதும், அதிகாரி, 'கப்சிப்' ஆனார்.


உண்மையை தான் வெளியிடுவோம்!



திருச்சிக்கு, முதல்வர், இ.பி.எஸ்., வருவதையொட்டி, பத்திரிகை புகைப்படக்காரர்கள், 'வீடியோகிராபர்'களுக்கு, 'கொரோனா' பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பரிசோதனையின் போது, அங்கிருந்த அரசு அதிகாரி ஒருவர், புகைப்படக்காரர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 'யாரெல்லாம் அரசுக்கு, 'பாசிடிவ்'வாக நியூஸ் போடுறீங்களோ, அவங்களுக்கு, டெஸ்ட் ரிசல்ட், 'நெகடிவ்'வாக வரும். யாரெல்லாம், அரசுக்கு எதிராக, 'நெகடிவ்'வாக நியூஸ் போடுறீங்களோ, அவங்களுக்கு எல்லாம், 'பாசிடிவ்' என்று தான் வரும். ஜாக்கிரதை...' என, குறும்பாக பயம் காட்டினார்.இளம் புகைப்படக்காரர் ஒருவர், 'பாசிடிவ் வந்தாலும் பரவாயில்லை... உண்மையான நியூஸ் தான் வரும்' எனக் கூற, அங்கிருந்த டாக்டர்கள் உள்பட, அனைவரும் சிரித்து விட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X