டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (5)
Share
 'டவுட்' தனபாலு

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு: பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளை, எதிர்காலத்தில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில், மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. இதை, துவக்கத்திலேயே, நானும், முதல்வர், இ.பி.எஸ்.,சும் எதிர்த்தோம். எனினும், நடக்கவில்லை. எந்தவொரு செயலை செய்வதாக இருந்தாலும், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றே செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

'டவுட்' தனபாலு: கூட்டுறவு வங்கிகள், ஏழை, எளியவர்களின் நலன்களை காக்காமல், முழுவதும், அரசு சார்பாகவும், அரசியல்வாதிகள் சார்பாகவும் செயல்படுவதாக, நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது. அதை அறிந்ததால் தானோ என்னவோ, ரிசர்வ் வங்கி, தமிழக கூட்டுறவு வங்கிகளை, தன் வசம் எடுத்துள்ளதோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!




ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:
தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 பாடத்திட்டங்கள், மூன்று பிரிவுகளாக உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை சாதாரண, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களால் எளிதாக படித்து, பிளஸ் 2 படிக்கவோ அல்லது இன்ஜினியரிங் போன்ற உயர் கல்வியில் சேரவோ முடியாத அளவுக்கு, அந்தப் பாடங்கள் மிகவும் கடினமாக உள்ளன.

'டவுட்' தனபாலு: கண்டிப்பாக அந்த புத்தகங்களை நீங்கள் வாங்கிப் படித்திருக்க மாட்டீர்கள். படித்திருந்தாலும், புரிந்திருக்காது என்பது வேறு விஷயம். ஏனெனில், நீங்கள், பிளஸ் 1க்கு நிகரான படிப்பு படித்து, 60 ஆண்டுகளுக்கு மேலாகி இருக்கும். எனவே, இந்த அறிக்கையின் சாராம்சம், கட்டாயம், மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்தது தான் என்பது, 'டவுட்' இல்லாமல், அனைவருக்கும் புரிந்திருக்கும்!



பத்திரிகை செய்தி:
சென்னையில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்க நியமிக்கப்பட்ட, ஆறு அமைச்சர்கள், சமீப நாட்களாக, வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. இதனால், கொரோனா ஒழிப்பு பணிகள் மந்தமடைந்துள்ளன; மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

'டவுட்' தனபாலு: வழக்கமாக அமைக்கப்படும் குழு தானே என, அமைச்சர்கள் எண்ணி இருந்திருப்பர். ஆனால், வீதி வீதியாக சென்று, தடுப்பு பணிகளை பார்வையிட வேண்டும் என்றதும், அதிர்ச்சி அடைந்திருப்பர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மருத்துவமனையில் படுத்ததும், பிற அமைச்சர்களும் பயந்து, 'ஓய்வெடுக்க' சென்றிருப்பரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!


காங்., பொதுச் செயலர் பிரியங்கா:
பொதுநல ஊழியர் என்ற முறையில், உ.பி., மக்களை காக்க வேண்டியது என் கடமை. அரசின் கொள்கைகளை பிரசாரம் செய்வது என் கடமை இல்லை. என்னை அச்சுறுத்துவதற்கு, உ.பி., அரசு, தன் நேரத்தை வீணடிக்கிறது. நீங்கள் விரும்பும் எந்த நடவடிக்கையையும் எடுத்துக் கொள்ளுங்கள்; நான் உண்மையை வெளிப்படுத்தியே தீருவேன். நான் இந்திராவின் பேத்தி.

'டவுட்' தனபாலு: முன்னாள் பிரதமரான உங்கள் பாட்டி இந்திராவை, இப்போதைய மக்கள் அதிகம் அறிந்திருக்க நியாயமில்லை. அதனால், 'நான் இந்திராவின் பேத்தியாக்கும்...' என, நீங்கள் சொன்னால், 'ஓ அப்படியா...' என கேட்டு, அப்படியே இருக்கத் தான் செய்வர். சரி, உங்களுக்கு ஏன், தாத்தா நேரு, தந்தை ராஜிவ், தாய் சோனியா, சகோதரர் ராகுல், கணவர் ராபர்ட் வாத்ரா ஆகியோரை உதாரணமாக சொல்ல முடியவில்லை. 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:
மாநில உரிமைகளை பாதுகாக்கும் விதத்திலும், விவசாயிகளின் கடன் பெறும் சலுகைகள் மற்றும் வசதிகளை பாதுகாக்கும் வகையிலும், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பிறப்பிக்கக் கூடாது என, போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், மத்திய அரசுடன், மாநில, அ.தி.மு.க., அரசு ஏன் இணக்கமாக இருக்கிறது. கொரோனா காலத்தில், இரு அரசுகளும் சண்டையிட்டுக் கொண்டால், இன்னும் நன்றாக வேடிக்கை பார்க்கலாமே என எண்ணுகிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. எனினும், நீங்கள் என்ன சொன்னாலும், அதை, தமிழக அரசு ஒருபோதும் கேட்காது என்பதில், 'டவுட்டே' இல்லை!


இ.பி.எஸ்., தமிழக முதல்வர்:
ஜூன், 30க்குப் பின், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது பற்றி, மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும். மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனை மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி உரிய முடிவெடுக்கப்படும். கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை.
'டவுட்' தனபாலு: முதல் ஊரடங்கை, பிரதமர் அறிவித்தார். அதன் பிறகு, நான்கு ஊரடங்கு உத்தரவுகளையும் நீங்கள் தான் பிறப்பித்தீர்கள். ஒவ்வொரு உத்தரவுக்கு முன், மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினீர்கள். அவர்களும், கொரோனா தொற்று அதிகம் இருக்கிறது என கூறினர். அதன் பிறகு, 'வல்லுனர்களின் ஆலோசனைபடி, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது' என, 90 நாட்களுக்கும் மேலாக மக்களை பூட்டி வைத்து விட்டீர்கள். இந்த முறையும் அப்படித் தானோ என்ற, 'டவுட்'டை, உங்கள் பேச்சு கிளப்புகிறதே!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X