சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இரு வாரங்கள் கடுமை காட்டுங்கள்!

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
இரு வாரங்கள் கடுமை காட்டுங்கள்!பி.எஸ்.மருதநாயகம், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, மார்ச், 24ல், முதற்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, மக்கள் மிகுதியான அச்ச உணர்வுடன் இருந்தனர். வெகுசிலர் மட்டுமே, அறியாமையால் அசட்டையாக இருந்தனர்.அப்போது, 'ஒரு உயிர் கூட, கொரோனாவிற்கு பலியாக விடமாட்டோம்' என்று முதல்வர்


இரு வாரங்கள் கடுமை காட்டுங்கள்!பி.எஸ்.மருதநாயகம், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, மார்ச், 24ல், முதற்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, மக்கள் மிகுதியான அச்ச உணர்வுடன் இருந்தனர். வெகுசிலர் மட்டுமே, அறியாமையால் அசட்டையாக இருந்தனர்.
அப்போது, 'ஒரு உயிர் கூட, கொரோனாவிற்கு பலியாக விடமாட்டோம்' என்று முதல்வர் இ.பி.எஸ்., கூறினார். மக்கள் தைரியம் பெற்றனர். 'மருத்துவர், செவிலியர், போலீசார் உட்பட, பல்வேறு அரசுத் துறையினரும், நமக்காக போராடுகின்றனர்; எனவே, ஊரடங்கிற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்' என, மக்களும் தீர்மானித்தனர்.
அரசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கியது. நம் பொருளாதார சிரமத்தை, அரசு உணர்ந்துள்ளது என, மக்கள் பெருமிதம் கொண்டனர். நோய் தொற்று பாதிப்பு, தமிழகத்தில் சொற்ப அளவில் இருந்தது. எல்லாம் சரியாக சென்றபோது தான், உச்ச நீதிமன்றம் வரை சென்று, போராடி, 'டாஸ்மாக்' கடையை, தமிழக அரசு திறந்தது. அப்போது தான், 'இது, மக்கள் நலன் காக்கும் அரசு தானா' என்ற சந்தேகம் எழுந்தது. மக்களின் உயிரை விட, கஜானாவின் வருவாய்க்கு தான், அரசு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற எண்ணம், மக்களுக்கு உறுதியானது.டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட பின், கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது. நோய் தொற்றைத் தடுப்பதற்கு, தினமும் பலமுறை கை கழுவுங்கள் என வலியுறுத்திய அரசு, இப்போது மக்களையே, 'கை கழுவி' விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.இப்போது, சூழ்நிலைக்கு ஏற்ப, மாவட்ட கலெக்டர்கள், முழு ஊரடங்கை அறிவிக்கின்றனர். கடைகள் செயல்படும் நேரத்தை, அந்தந்தப் பகுதி வர்த்தகர் சங்கம் முடிவு செய்து அறிவிக்கிறது.
பொதுமக்களும், கொரோனா மீதான அச்சத்தை ஒதுக்கி, உயிரைத் துச்சமாகக் கருதி, இயல்பாக வலம் வருகின்றனர். சமூக இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை அலட்சியப்படுத்துகின்றனர்.கொரோனா பாதிப்பு, உச்சத்தில் இருக்கிறது. உயிர் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இனியும், அசட்டையாக இருக்கக் கூடாது.வைரஸ் பரவலை தடுக்க, அரசு கடுமையான முறையில், முழுமையான ஊரடங்கை, இரு வாரங்களுக்கு அறிவிக்க வேண்டும். முக்கியமாக, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். ஊரடங்கில் தளர்வு என, மாதக்கணக்கில் இழுத்துச் செல்வதை காட்டிலும், இரு வாரங்கள் கடுமை காட்டி, கொரோனாவை தடுக்க வேண்டும்.


கண்டும்காணாதிருக்கும்மத்திய அரசு!அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா காலத்தில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வு, பொதுமக்களுக்கு மேலும் தாங்க முடியாத பாரத்தை சுமக்கச் செய்துள்ளது.மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. இதன் விலை உயர்வு, பொதுமக்களை பெரிதும் பாதிக்கிறது.சர்வதேச அளவில் விற்கப்படும், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, அவற்றின் விலையை நிர்ணயம் செய்யும் முறையை, காங்கிரசைச் சேர்ந்த, மன்மோகன் சிங் தலைமையிலான, மத்திய அரசு அறிமுகம் செய்தது.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, மாதம், இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டது.இந்த நடைமுறையை, தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு மாற்றி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்தியதோடு, அதன் பொறுப்பையும், எண்ணெய் நிறுவனங்களின் கையிலேயே ஒப்படைத்தது. இது, தவறான முடிவோ என, சந்தேகம் எழுகிறது.கச்சா எண்ணெயின் விலை, கொஞ்சம் உயர்ந்தாலும், உடனடியாக பெட்ரோல், டீசலின் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. ஆனால், தற்போது, கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்த நிலையிலும், அதற்கு ஏற்ப விலை குறைப்பு செய்யவில்லை.எண்ணெய் நிறுவனங்களின், இந்த வியாபார நிலைப்பாட்டை, மத்திய அரசு கண்டும் காணாமல் இருப்பது, அதிருப்தியை தருகிறது.எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்த, விலை நிர்ணய உரிமையை, மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். மக்கள் நலனில் அக்கறை உடைய மத்திய அரசு, அதை செய்யும் என, நம்புவோம்.


'1962' கற்றுக்கொடுத்தபாடம்!எஸ்.ரவிசங்கர், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 1962ல், நம் நாட்டில், பல்லாயிரக்கணக்கான, கி.மீ., பரப்பை, சீனா ஆக்கிரமித்த போது, பார்லிமென்டில் நடந்த விவாதத்தில், அப்போதைய, பிரதமர் நேரு, 'அங்கு, ஒற்றை புல் கூட முளைப்பதில்லை' என்றார். அதாவது, சீனா கைப்பற்றிய நிலங்கள், நம்மிடம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்று தான்; அதனால், எந்த உபயோகமும் இல்லை என, நியாயப்படுத்துவது போல் இருந்தது.அதற்கு, எம்.பி., ஒருவர், 'தலையில், ஒரு முடி கூட இல்லை; அதற்காக, தலையை இழந்து விடலாமா' என, நெற்றியடியாக கேட்டார்.வடகிழக்கு இமாலயத்தில் உள்ள, நேபா பகுதியிலிருந்து, லடாக் வரை, சீனப் படைகளை எதிர்கொள்வதற்கு, இந்திய ராணுவத்திற்கு துணிவும், தன்னம்பிக்கையும் தான், ஆயுதமாக இருந்தது என்றால் மிகையாகாது.
ஆனால், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இல்லை. அதனால் தான், 20 வீரர்கள் உயிரிழந்தனர்.ஆயுத பற்றாக்குறை, நவீனம் இல்லாத தளவாடங்கள், 100 அடி செல்வதென்றால் கூட, அசாமில் உள்ள, கிழக்குப் பிராந்திய தலைமையிடத்தில், அனுமதி கேட்க வேண்டும். அந்த தலைமை நிர்வாகி, டில்லியில் உள்ள அமைச்சகத்திற்கு, தகவல் தெரிவிக்க வேண்டும். அமைச்சர், அதை பரிசீலித்து, கோரிக்கையை அனுமதித்து, ராணுவ வீரர்களுக்கு சொல்வதற்குள், பல பொழுதுகள் விடிந்து கடந்துவிடும்.கடந்த, 1962ல், சீனா வெற்றி பெற்றதற்கான காரணம் குறித்து, அப்போதைய ராணுவ பிரிகேடியர் டால்வி, 'இமாலயன் பிளான்டர்' என்ற புத்தகத்தில் விரிவாக விளக்கி உள்ளார்.
அது, நமக்கான படிப்பினையாக இருக்கும். நம் ராணுவத்திற்கு எது தேவை என்பதை தெளிவாக விளக்கும்.இனி, நம் நாட்டில் இருந்து, ஒரு பிடி மண் கூட, எதிரியின் வசம் செல்லக் கூடாது. ஒரு ராணுவ வீரர் கூட உயிரிழக்கக் கூடாது. அதற்கு, ராணுவத்தை நவீன ஆயுதங்களாலும், தொழில் நுட்பத்தாலும் மேம்படுத்த வேண்டும்.


நீதி ஒருநாள் வெல்லும்!வி.எம்.ராம்குமார், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மக்கள் தவறு செய்தால், போலீசார் தண்டிக்கின்றனர். இப்போது போலீசார், இரட்டை கொலை செய்துள்ளனரே, சட்டம் என்ன செய்ய போகிறது?துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த, ஜெயராஜ், இவரது மகன், பென்னிக்ஸ் ஆகியோரை, சாதாரண வாக்குவாத பிரச்னைக்காக, போலீசார், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இருவரையும், லத்தியால், போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.சாதாரண வாய் சண்டையில், ரவுடிகள் ஒருவரை ஒருவர் வெட்டி, கொலை செய்வதுண்டு. இந்த கலாசாரம், போலீஸ் துறையிலும் பரவிவிட்டதா? அப்புறம் ரவுடி என்ன, போலீஸ் என்ன... எல்லாம் ஒன்று தானே!'போலீஸ் பணியில் இருக்கிறோம்' என்ற மமதையில், ஈவு இரக்கமின்றி, இரண்டு கொலைகளை செய்த, எஸ்.ஐ.,கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது வழக்கமான, துறை ரீதியிலான நடவடிக்கைத் தான். அவர்களுக்கு நீதிமன்றத்தில், அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்.மக்களை பாதுகாக்கத் தான், காவல் துறை; அவர்களை கொலை செய்ய அல்ல.அரசு ஊழியர் என்பதால், அவர்களை காப்பாற்ற, உயர் அதிகாரிகள் முயற்சிக்கக் கூடாது. நீதி தவறாமல் நடவடிக்கை எடுக்க, அரசும், நீதித் துறையும் முன் வர வேண்டும்.வழக்கை ஆறப்போட்டால், இந்த இரட்டை கொலை சம்பவத்தை, மக்கள் மறந்துவிடுவர் என, நினைத்துவிட வேண்டாம். நீதி ஒருநாள் வெல்லும்!


அரசுஊழியர்களையும்கவனியுங்கள்!எஸ்.விஜி, பழநி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, 60 வயதிற்கு மேல் உள்ளோர், வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என, அரசு அறிவுறுத்தி வருகிறது.அவர்களுக்கு, வைரஸ் பரவினால், காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும் என, மருத்துவத் துறையினர் கூறி வருகின்றனர். வயது, பொருளாதார நிலை பார்த்து, நோய் வருவதில்லை. அரசு ஊழியரான, என் கணவருக்கு, 52 வயது. 20 ஆண்டுகளுக்கு மேலாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையும், மேற்கொண்டு வருகிறார்.என் கணவரை போல, 50 வயதுக்கு மேற்பட்ட பலர், அரசு ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கும் உடல்நல குறைபாடு உள்ளது; நோய் எதிர்ப்பு சக்தியும், மிகவும் குறைவாக இருக்கும்.
அரசு ஊழியர்கள், மாதம் மூன்று முறை, மாவட்ட அளவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என, ஆணை பிறப்பிக்கப்படுகிறது.'தனித்திரு, விலகியிரு' என்பது, அரசு ஊழியர்களுக்கு இல்லையா? அவர்களுக்கு, குடும்பம் இல்லையா?தனியார் ஊழியர்கள், வீட்டில் இருந்து பணி செய்வது போல, அரசு ஊழியர்களுக்கும், அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே பணி ஒதுக்கீடு செய்யலாமே!மாவட்ட அளவிலான கூட்டத்தில், அவசியம் பங்கேற்க வேண்டும் என்றால், அவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல, வாகன வசதி செய்து தர வேண்டும். ஆனால் அவர்கள், பொது போக்குவரத்தான, பஸ்சைத் தான் பயன்படுத்துகின்றனர். குறைந்தப்பட்சம், பஸ்களில், அரசு ஊழியர்களுக்கு, தனி இருக்கை ஒதுக்கலாமே.சேவை துறையில் இருப்போருக்கு, நோய் தொற்று ஏற்படக் கூடாது என்பதில், அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரை, சானிடைசர், முககவசம் உட்பட, போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்குமா?


'ஆன்லைன்'கல்வியின்சிக்கல்கள்!சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, கல்வி நிலையங்கள் எப்போது திறக்கப்படும் என்பது, புரியாத புதிராக உள்ளது. 'ஆன்லைன்' வகுப்பு முறைக்கு, நம் நாடு மாற வேண்டிய நிலைக்கு, தள்ளப்பட்டுவிட்டது.இதனால், கல்வி கற்கும் மாணவர்களுக்குள், ஏழை - பணக்காரர் பாகுபாடு வந்து விடுமோ என, அச்சப்பட தோன்றுகிறது.கல்வி கற்பதில், போதிய வசதி இல்லாத மாணவர்கள், இடைநிற்றல் கூடாது என்பதற்காக, எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டது.
மேலும், ஊக்கத்தொகை, இலவச கல்வி உபகரணங்கள், உணவு என, பல திட்டங்களை செயல்படுத்தி, ஏழை மாணவர்களின் கல்வி கற்றலுக்கு, அரசு உதவி வருகிறது.இந்நிலையில், தற்போது நடந்துவரும், 'ஆன் லைன்' வகுப்புகள், கல்வி கற்பதில், மாணவர்களிடையே, ஏழை - பணக்காரர் பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.நகரத்தில் உள்ள மாணவர்கள், தற்போது, ஆன்லைன் வழியே கல்வி கற்றுக்கொண்டிருக்க, கிராமப்புற மாணவர்கள், தங்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர்.பல வீடுகளில், மொபைல்போன், மடிக்கணினி இருந்தாலும், அவற்றை, பொழுதுபோக்கிற்காகத் தான் பயன்படுத்துகின்றனர். அதை, ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதில்லை.ஏற்கனவே, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு, மடிக்கணினி வழங்கி உள்ளது. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்குவது என்பது, மிகப்பெரிய சவால்.
ஆன்லைன் வழியே, ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் அனைவரையும் கவனிப்பது, சாத்தியமில்லை. மேலும், வீட்டின் சூழல், தடையில்லாத மின்சாரம், இணையதள வசதி என, பல்வேறு சிக்கல்கள், கிராமபுற மாணவர்களுக்கு உண்டு.மாணவர்களின் பெற்றோர் படித்திருந்தால், ஓரளவிற்கு, ஆன்லைன் திட்டம் வெற்றிபெற வாய்ப்பு உண்டு. ஆனால் படிப்பறிவு இல்லாத பெற்றோரின் பிள்ளைகள், கல்வி கற்பதில், சுணக்கம் காட்டுவர்.
ஆன்லைன் கல்வியை, 'எடுத்தோம் கவிழ்ந்தோம்' என, அமல்படுத்த முடியாது. அதில் உள்ள சிக்கல்களை தீர்க்க, சில ஆண்டுகள் ஆகும். அதுவரை, மாணவர்களின் நிலை கேள்விக்குறி தான்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-ஜூன்-202016:00:04 IST Report Abuse
Bhaskaran அரசுஊழியர் லஞ்சம் வாங்கமாட்டேன் என்று இருக்க சொல்லுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X