சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை


'உண்மை தான்; அனைவரும் பின்பற்ற வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி அறிக்கை:
நம் செயல்பாடுகளால் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும். தயவு செய்து அனைவரும் வெளியே செல்லும் போது, முக கவசம் அணிய வேண்டும். வீட்டிற்குள் நுழைவதற்கு முன், கை, கால்களை சுத்தம் செய்து பொது சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றுவதால் வீட்டில் உள்ளவர்களுக்கும், வெளியே இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.


'நோயால் பாதிக்கப்பட்டவர்களை சமூகத்திலிருந்து பிரிக்கும் முயற்சி இது என கூறி, அவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த நடக்கும் அரை வேக்காடு நடவடிக்கை. இதை முதலில் நிறுத்த வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை:
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில், கொரோனா நோய் தொற்று உள்ளவர்களின் வீடுகளைச் சுற்றி கம்பங்கள் மற்றும் இரும்புத் தகடு கொண்டு அடைக்கப்படுகின்றன. இதனால், நோய் தொற்றுக்கு ஆளானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த தீய செயலை உடனடியாக நிறுத்த வேண்டும்.

'கேரளாவிலும், ஆளும் அரசுக்கு எதிராக, எதிர்க் கட்சிகள், எல்லா விவகாரங்களிலும் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன போலும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசி தரூர் அறிக்கை: கேரளாவில், கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ள தேர்வை, ரத்து செய்ய வேண்டும். பல கல்லுாரிகள், கொரோனா தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் உள்ளன. அங்கு தேர்வை நடத்துவதால், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் உயிருடன் விளையாட வேண்டாம்.



'நீங்க சொல்வது நடக்காமல் இருக்கட்டும். சரி, பதவியில் இருந்த போது, இதை அறிந்து, இந்த, 13 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டீர்களா...' என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், டாக்டர் குழந்தைசாமி பேட்டி
: பன்றிக்காய்ச்சல் எங்கெல்லாம் பரவியதோ, அங்கெல்லாம் கொரோனாவும் தாக்கும். அந்த அடிப்படையில், சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரை, திண்டுக்கல், வேலுார், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய, 13 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில், விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது.


'நல்ல வேளை, மாவட்ட தலைவர்கள், தங்களைத் தாங்களே, தலைவர்களாக அறிவித்து, பொறுப்பேற்றுக் கொள்ளாமல் இருந்தனரே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை:
மாவட்ட காங்., தலைவர்கள் பட்டியலை, மாநில தலைமை முடிவு செய்து, தேசிய தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்தப் பட்டியலுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்காத நிலையில், சமூக ஊடகங்களில் பட்டியல் வெளியாவது மிகுந்த வருத்தத்திற்குரியது.


'அவசியம் செய்ய வேண்டிய இந்த கோரிக்கையை, மத்திய, மாநில அரசுகள் ஏற்கும் என நம்பலாம்...' என, கூறத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
ஆணவக் கொலைகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழங்கிஉள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஆணவக் கொலை தொடர்பான மசோதாவை, மத்திய அரசு அவசரச் சட்டமாகப் பிறப்பிக்க வேண்டும்.


'அவர்கள் நேரடியாக, கம்யூ.,க்களிடம் வந்து முறையிட்டனரா; அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தால், உடனடியாக ஏற்கப்படுமே...' என, எதிர்கேள்வி கேட்கத் துாண்டும் வகையில், இந்தியக் கம்யூனிஸ் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை:
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், 3,000க்கும் அதிகமான பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு, ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை.


'காவிரி நீரை வைத்து அரசியல் செய்வதும், கடந்த, இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து விட்டது. தண்ணீர் திறக்கவில்லை என்றாலும், தண்ணீர் திறந்தாலும், அந்தப் பகுதியில் அரசியல் தான் நடக்கிறது...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு, மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறந்துவிட்ட பிறகும், சில கிளை ஆறுகளிலும், வாய்க்கால்களிலும், கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளாக, இப்படித்தான் நடக்கிறது. இந்த ஆண்டும் அதையே செய்வதாக வரும் செய்திகள், வேதனை அளிக்கின்றன.


'வித்தியாசமாக யோசிக்கும் கட்சித் தலைவர் விஜயகாந்த் என்பதை தக்க வைத்துக் கொண்டீர்களே...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை:
நாடு முழுதும் உள்ள, கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கியின் கீழ் வரும்போது, லஞ்சம், ஊழல் தடுக்கப்படும்; முறைகேடுகள் நடப்பது தவிர்க்கப்படும்; வங்கியில் நடக்கும் பண பரிவர்த்தனைகள் முறைப்படுத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X